எதிர்வரும் மேமாதம் 10 ஆம் திகதி நடைபெற உள்ள கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் 2006 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின்படி 982721 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன், இவர்களில் 22412 பேர் தபால் மூலம் வாக்களிக்க உள்ளதாக மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தேர்தலுக்காக இம்மாதம் 28 ஆம் திகதி 29 ஆம் திகதிகளில் இடம்பெற உள்ள தபால் மூல வாக்களிப்புக்கான வாக்காளர்கள் அட்டைகள் கடந்த 18 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஏனையவர்களுக்கான வாக்காளர் அட்டைகள் இம்மாதம் 21 ஆம் திகதி முதல் மேமாதம் 02 ஆம் திகதி வரை விநியோகிக்கப்படவுள்ளதாகவும் மே மாதம் 02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விநியோகத்திற்கான விசேட நாள் எனவும் உதவித் தேர்தல் ஆணையாளர்கள் தெரிவித்தனர்.
தபால் மூல வாக்களிப்புக்கென திருமலை மாவட்டத்தில் இருந்து கிடைத்த 10519 விண்ணப்பங்களில் 2002 நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கிடைத்த 4865 விண்ணப்பங்களில் 438 நிராகரிக்கப்பட்டதாகவும் அம்பாறை மாவட்டத்தில் இருந்து கிடைத்த 11 523 விண்ணப்பங்களில் 2055 நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர்கள், வாக்காளர் அட்டை எழுதும் பணிகள் தற்பொழுது துரிதமாக இடம்பெற்றுவருவதாகவும் அவர்கள் கூறினர்.
வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் தங்களது அடையாளங்களை உறுதிப்படுத்தி, 02 ஆம் திகதிக்குப் பின்னர் அருகிலுள்ள தபாலகங்களில் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.