ரொஷான் நாகலிங்கம்
ஏப்ரல் மூன்றாம் வாரம் வரை எலிக்காய்ச்சலினால் பலியானவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ள நிலையில், கடந்த வருடம் 34 பேர் இந்நோயின் தாக்கத்தால் மரணமாகியுள்ளனர்.
இது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து பிரதி சுகாதார மற்றும் போஷணையமைச்சர் வடிவேல் சுரேஷ் கருத்துத் தெரிவிக்கையில்;
`பதுளை, கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மலையகப் பகுதிகளிலேயே இந்நோயின் தாக்கம் அதிகமாகவுள்து. குறிப்பாக எஹலிய கொடப் பகுதியிலேயே பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்காய்ச்சல் குறித்து ஆராய்வதற்கு சுகாதார பரிசோதகர்களை அப்பகுதிகளுக்கு நான் அனுப்பி வைத்துள்ளேன். மலையகப் பகுதிகளின் தோட்டங்கள், கிராமங்கள் தோறும் மக்கள் மிக நெருக்கமாக வாழ்வதனாலும் எஹலிய கொடப் பகுதியிலிருந்து மலையகப் பகுதிகளுக்கு இலகுவாக இக்காய்ச்சல் பரவக் கூடிய தன்மை காரணமாக விஷேட தடுப்பு நடவடிக்கையை எடுத்துள்ளேன்.
இதற்கமைய பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஷேட குழுவை அனுப்பி வைத்து இக்காய்ச்சல் வராமல் இருப்பதற்கான கிருமி நாசினி தெளித்தல் உட்பட, மக்களுக்கு இது தொடர்பில் அறிவித்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காய்ச்சலுக்கான அறிகுறி காணப்படின் உடனடியாக வைத்தியரை அணுகுமாறு நான் கோருவதுடன் இது தொடர்பில் பரிசோதனையை மேற்கொள்வதற்கு விஷேட குழுவை நான் நியமித்துள்ளேன். நாட்டின் மலையகப் பகுதியிலேயே இத்தாக்கம் அதிகம் காணப்படுகின்ற நிலை, ஏனைய பகுதிகளில் தாக்கம் தாழ்ந்த நிலையிலுள்ளதுடன் இது தொடர்பில் வடக்கு- கிழக்கிலிருந்து எந்தவொரு முறைப்பாடும் கிடைக்கவில்லை' எனவும் தெரிவித்தார்.