விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான ஆட்சேபனைகளை தெரிவித்து வருவதாக வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
புலிகளுக்கு ஆதரவான சக்திகள் இராணுவ நடவடிக்கைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவுடன் தீவிரமாக எடுத்துக் கூறிவருகின்ற போதும் இந்தியாவிலும் பார்க்க ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்தே இலங்கை அதிகளவு எதிர்ப்புக்கு முகம் கொடுக்க வேண்டியிருப்பதாக அந்த அதிகாரி கூறியுள்ளார். சிறிய பயங்கரவாதக் குழுவின் அழுத்தங்களை கவனத்திற் எடுக்காத அளவுக்கு இந்தியா பெரிய நாடு. ஆனால், பெரும்பான்மைச் சிங்களவர்கள் தமிழர்கள் மீது மேலாதிக்கத்தை செலுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் பார்க்கிறது. இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வந்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களும் குழுக்களும் அறிக்கைகளை விடுத்து வருகின்றன என்று தம்மை அடையாளம் காட்ட விரும்பாத அந்த அதிகாரி நியூவின்ட் பிரஸ் இணையத்தளத்திற்குத் தெரிவித்திருக்கிறார்.
54 சதவீதமான தமிழர்கள் தென்னிலங்கையில் சிங்களவர்களுடன் சௌஜன்யத்துடன் வசிக்கின்றனர் என்பதையும் தமது தாயகமென கூறப்படும் வடக்கு, கிழக்குக்கு செல்லாமல் தெற்கில் சிங்களவர்களுடன் சௌஜன்யத்துடன் வாழ்கின்றனர் என்ற உண்மையை ஐரோப்பிய ஒன்றியம் கவனத்தில் எடுக்கவில்லை எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
பொது முன்னுரிமை முறைமையை நீடிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை தூண்ட வேண்டிய நெருக்கடியான தருணத்தில் இலங்கை இருப்பதாகவும் இலங்கையிலிருந்து ஆடைகளை ஏற்றுமதி செய்வதற்கு இந்தச் சலுகை மிக அவசியமெனவும் இலட்சக் கணக்கானோரின் தொழில் வாய்ப்புகளுடன் தொடர்புபட்ட விடயம் இதுவெனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அகதிகள் மத்தியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் உள்ளடங்களாக ஐரோப்பிய ஒன்றியத்தில் பல்வேறு சட்டசபைகள், பேரவைகளில் இவர்களின் சக்தி அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஜனநாயகம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை வெளிப்படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றப்பாடு அமைகிறது. ஆனால், பொது முன்னுரிமை முறைமைகளின் கீழ் இலங்கைக்கான சலுகையை மறுப்பதோ முடிவுக்குக் கொண்டு வருவதோ அல்லது இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருமாறு இலங்கைக்கு அழைப்பு விடுவதோ உலகிலேயே மிக மோசமான பயங்கரவாதக் குழுவுக்கு 10 வருட வாழ்வைக் கொடுப்பதாக அமையும் என்று அவர் கூறியுள்ளார்.
அதேசமயம், இலங்கைக்கும் புலிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தை இடம்பெறுவதற்கான ஏற்பாடுகளை இந்தியா மேற்கொள்ள வேண்டுமென தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியிருப்பது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்க வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி மறுத்துவிட்டார்.
திறமையான ஜனநாயகத்தில் இடம்பெறும் ஒவ்வொரு விடயம் குறித்தும் எம்மால் கருத்துத் தெரிவிக்க முடியாது. புலிகளிடமிருந்து எந்த வழியிலும் இந்தியாவுக்கு அழுத்தம் இல்லை. இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இந்தியாவை இழுத்துவிட புலிகள் முயற்சித்தாலும் இந்தியாவுக்கு எந்த அழுத்தமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.