* தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டனம்
மிரட்டல்கள் எதற்கும் அஞ்சாமல் செயற்பட்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அனைத்து மனித உரிமை மீறல் சம்பவங்களையும் சர்வதேசத்திற்கு எடுத்துச் சென்ற வடக்கு, கிழக்கு மனித உரிமைகள் செயலக பணிப்பாளர் அருட்திரு.எம்.எக்ஸ். கருணாரட்ணம் அடிகளார் படுகொலை செய்யப்பட்ட மரணச் செய்தி மனித விழுமியங்களையும் மானிட பண்புகளையும் மதித்து நடக்கும் அனைவரது மனங்களையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தனது அனுதாப அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வடக்கு- கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தினையும், சமாதானத்தினையும் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்டுவந்த சமாதான வெண்புறாவை ஆழ ஊடுருவும் படையினர் கிளைமோர் தாக்குதலை நடாத்தி கொன்றுள்ளமை ஒரு மிலேச்சத்தனமானதும் கோழைத்தனமானதுமான செயற்பாடாகும். இத்தகைய கோழைத்தனமான தாக்குதல்களினால் அரசு மனித உரிமை மீறல்களுக்காக குரல் கொடுக்கும் மனித உரிமை ஆர்வலர்களை நசுக்க முயற்சித்து வருகின்றது.
இத்தகைய சம்பவங்களின் ஊடாக தற்போது நிலவும் வட - கிழக்கு பிரச்சினை தீர்க்கப்பட முடியாத ஒரு மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது என்பதனை சாதாரண குடிமக்களும் புரிந்து கொண்டுள்ளனர்.
தொடரும் இத்தகைய தாக்குதல்கள் வட - கிழக்கில் மாத்திரமன்றி நாடு பூராகவும் பயப்பீதியிலும், நிச்சயமற்ற நிலைமையிலுமே மக்களை வாழ நிர்ப்ந்தித்துள்ளதுடன், ஜனநாயக மரபுகளை குழிதோண்டி புதைக்கின்ற செயற்பாடாகவும் மாறியுள்ளது.
நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என இதயசுத்தியுடன் செயற்பட்ட ஒரு சமாதான புறாவினை நாம் இன்று இழந்து தவிக்கின்றோம். அன்னாரின் ஆத்ம சாந்திக்காக நாம் எல்லோரும் பிரார்த்திப்பதுடன், அவரின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு உறுதி பூண்போம் என தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.