நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை தேர்தலில், கல்குடா தொகுதியிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்களால் மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு, வாழைச்சேனை, பொலிஸ் பிரிவிலுள்ள கோழிக்கடை வீதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான, ஏ.சி. அப்துல் ரகீம் என்பவரே இவ்வாறு கடுமையாக தாக்கப்பட்டவராவார்.
ஓட்டமாவடி பகுதியில் தேர்தல் பிரசாரங்களை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சமயம், ஓட்டமாவடி, பாத்திமா, பாலிகா மகாவித்தியாலயத்திற்கு அருகில் வைத்து இவர் தாக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தின் எதிரொலியாக, கஜர் பள்ளி வீதியில் இருந்த ஐ.தே.கட்சியின் தேர்தல் அலுவலகம், ஐ.மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆதரவாளர்களால் உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தின் போது, அலுவலகத்தில் இருந்த கதிரைகள், மேசைகள், மற்றும் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று ஆட்டோ வண்டிகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, அந்நூர் தேசிய பாடசாலைக்கு அருகில் வைத்து, மற்றொரு ஐ.தே.கட்சி ஆதரவாளரின் மோட்டார் சைக்கிளும் ஆளும் கட்சியின் ஆதரவாளர்களால் தீவைத்து எரியூட்டப்பட்டுள்ளது.
வேட்பாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை மக்களடி வீதியைச் சேர்ந்த பக்கீன் முகைதீன் மொஹமட் பைசல் என்ற இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த அசம்பாவிதங்களின் எதிரொலியாக வாழைச்சேனையில் உள்ள ஐ.மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரு காரியாலயங்களும், ஒரு மீனவர் சங்கக் கட்டிடமும் நேற்று அதிகாலை 2.30 மணியளவில், உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தில், அலுவலகத்தின் உள்ளே இருந்த தளபாடங்கள் சேதமாக்கப்பட்டதுடன் தேர்தல் பிரசாரங்கள், "கட்டவுட்" கள் என்பனவும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், வாழைச்சேனை, கிராம சபை அலுவலக வீதியிலும் கோழிக்கடை வீதியிலும் இருந்த சுதந்திரக் கூட்டமைப்பின் இரு அலுவலகங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.
வாழைச்சேனை மக்களடி வீதியில் சேதமாக்கப்பட்ட மீனவர் சங்க கட்டிடம் கூட்டமைப்பின் ஆதரவாளர்களால் தினமும் கூடி கலந்துரையாடும் ஒரு இடமாக பாவிக்கப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.