கொழும்பின் வேண்டுகோளுக்கு புதுடில்லியிடமிருந்து இதுவரை பதில் இல்லை அரிசிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில் 1 இலட்சம் தொன் அரிசியை விநியோகிக்குமாறு இலங்கை அரசாங்கம் அவசர கோரிக்கை விடுத்துள்ளபோதிலும் இந்தியா காலை வாரி விடும் அறிகுறி காணப்படுவதாக கவலை தெரிவிக்கப்படுகிறது.
உத்தியோகபூர்வமாக அரிசியை விநியோகிக்குமாறு கொழும்பு கோரிக்கை விடுத்தது. நாட்கள் கழிந்துள்ளபோதும் புதுடில்லி இது தொடர்பாக இதுவரை பதிலளிக்கவில்லையென வர்த்தக வட்டாரங்கள் `நியூவின்ட் பிரஸ்' இணையத்தளத்துக்கு நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளன.
இலங்கைக்கு அரிசியை விநியோகிப்பது தொடர்பாக தீர்மானம் எடுக்கும் நடவடிக்கைகள் வெளிவிவகார அமைச்சு, வர்த்தக அமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவை சம்பந்தப்பட்டவையாகும். ஆனால், இந்தியா விலைவாசி அதிகரிப்பை எதிர்கொண்டுள்ளது. விசேடமாக அரிசி உட்பட உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பை இந்தியாவும் எதிர்நோக்குகின்றது.
அறுவடையில் வீழ்ச்சி, மோசமானகாலநிலை, பணவீக்க அதிகரிப்பு என்பனவற்றால் சந்தைக்கான நிரம்பலில் வீழ்ச்சி ஏற்பட்டதால் பாசுமதி அரிசி தவிர்ந்த ஏனையவற்றை ஏற்றுமதிசெய்வதற்கு இந்தியா அண்மையில் தடைவிதித்துள்ளது.
ஆயினும் பங்களாதேஷ் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் கோரிக்கைக்கு செவிசாய்த்த இந்தியா, அந்நாடுகளுக்கு தலா 5 இலட்சம் தொன் அரிசியை விநியோகிக்க அனுமதியளித்தது. ஆனால் இலங்கை கோரியிருக்கும் 1 இலட்சம் தொன் அரிசியை விநியோகிப்பதற்கு நெருக்கடியான சூழ்நிலை இருப்பதாக தென்படுகிறது. முக்கியமான உணவுப் பொருளான அரிசிக்கு பற்றாக்குறை ஏற்படுமானால் ஏற்கனவே 7 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ள பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தனது மக்களுக்கு மேலும் சுமையை ஏற்றும் பாதகமான நிலைமை தோன்றிவிடுமோ என்ற அச்சம் சில சமயம் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கின்ற நிலைமையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அது ஆளும் கட்சிக்கு அசௌகரியமான நிலையை தோற்று வித்து விடும். ஆனால், அரிசி ஏற்றுமதிக்கு தடைவிதித்திருப்பதால் அத்தடை அமுலில் இருக்கும் போது அரிசியை பிறிதொருநாட்டுக்கு விநியோகிக்கும் விடயம் பல அமைச்சுகள், பல திணைக்களங்கள் சம்பந்தப்பட்டதென்பதால் அதற்கு காலம் எடுக்கும் என்று உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
கோரிக்கை விடுத்த திகதியிலிருந்து கப்பலில் ஏற்றி உரிய இடத்தை சென்றடைய 2 மாதகாலம் எடுக்குமென தன்னை அடையாளம் காட்ட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறினார்.
இதில் இரு விடயங்களுக்கு தீர்வுகாணப்படவேண்டும். ஏற்று மதித்தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டியது ஒரு விடயமாகும். உள்நாட்டு விலையிலிருந்தும் விலக்களிக்கப்பட வேண்டிய மற்றைய பிரச்சினையாகும். தற்போது தொன் ஆயிரம் டொலராக உள்ளது. ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை 1 தொன் அரிசியை ஆயிரம் டொலர்களுக்கு கொள்வனவு செய்ய முடியாத நிலைமை உள்ளது என சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன. அரசியல் ரீதியான தேவை இருந்தால் இந்தியாவால் விலைக்கு விலக்களிக்க முடியும். பங்களாதேஷ், தென்னாபிரிக்காவுக்கு தலா 5 இலட்சம் தொன் அரிசியை விநியோகிப்பதற்கான அரசியல் ரீதியான காரணம் இருந்திருக்கக்கூடும். ஆதலால் அரசியல் ரீதியான வலுவான கோரிக்கை கொழும்பிலிருந்து தற்போது கொடுக்கப்பட வேண்டியது தற்போதைய தேவையாக உள்ளது என்று அந்த வட்டாரம் மேலும் கூறியது.
மியன்மாரிலிருந்து உடனடியாக 50 ஆயிரம் தொன் அரிசியை பெற்றிருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது. மேலும் 50 ஆயிரம் தொன் அரிசியைப் பெற விருப்பதாகவும் கொழும்பு தெரிவித்துள்ளது. ஆனால், யங் கூனிலிருந்து இரு கப்பல்களில் மொத்தம் 7 ஆயிரம் தொன் அரிசியே வந்திறங்கியிருப்பதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேசமயம், அரிசியை கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யுமாறு அரசு வர்த்தகர்களைப் பணித்திருப்பதுடன், கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.