* தலைமன்னார் - இராமேஸ்வரம் கடலுக்கடியில் இணைப்பு
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் மின்சாரத்தை பரிமாறிக்கொள்ளும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து இரு நாடுகளும் ஆராய்ந்து வருகின்றன.
இருநாடுகளுக்குமிடையில் கடலுக்கு அடியில் இணைப்பை ஏற்படுத்தி மின்சாரத்தை விநியோகிப்பதற்கான வலைப்பின்னல் அமைப்பை மேற்கொள்ளும் திட்டம் குறித்தே தற்போது ஆராயப்படுகிறது. ஒரு நாட்டில் மின்சாரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் மற்றைய நாட்டிலிருந்து விநியோகிக்கக்கூடியதாக இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
2292 கோடி ரூபா செலவில் இத்திட்டத்தை இந்திய அரசுக்கு சொந்தமான மின்சக்தி நிறுவனம் தயாரித்திருக்கிறது.
தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையில் வயர் குழாய்களை பொருத்துவதற்கு திட்டமிடப்படுகிறது.
இந்தியாவில் இராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு இந்த மின்சார வயர்கள் பொருத்தப்படும். அதேபோன்று இலங்கையில் தலைமன்னாரிலிருந்து அநுராதபுரத்திற்கு வயர்கள் பொருத்தப்படும்.
உலகளாவிய ரீதியில் ரெலிக்கொம் மற்றும் இணையத்தள தொடர்புகள் சமுத்திரங்களுக்கிடையில் பொருத்தப்படுவது போன்று இந்த மின்சார இணைப்புகளும் பொருத்தப்படும். சுறாமீன்கள், கப்பல் நங்கூரங்கள் என்பவற்றால் சேதம் ஏற்படாமல் தவிர்ப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும். பிரதான மின்விநியோகக் குழாயுடன் இந்தத் தொடர்பை கண்காணிக்க மேலதிக தொலைத்தொடர்பு சக்தியுடைய பைபர் குழாயும் பொருத்தப்படும்.
இத்திட்டம் மிக நீண்டகாலம் எடுக்கும் விடயமாகும். ஆனால், இந்திய மின்சக்தி கனிஷ்ட அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இத்திட்டம் குறித்து அதிகளவு ஆவல் கொண்டுள்ளார். இருநாடுகளும் செலவினத்தை பகிர்ந்துகொள்வது தொடர்பாக விரிவான விபரங்களுடன் அடுத்த கட்டமாக விரிவான அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது. பிராந்திய ஒருங்கிணைப்புக்கான கருவியாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் திட்டம் இதுவாகும். இதுவொரு சிறப்பான முன்னுதாரணமாகும். ஏற்கனவே, நாம் பூட்டான், நேபாளத்துடன் இத்தகைய தொடர்புகளை கொண்டிருக்கிறோம். பங்களாதேஷ், மியான்மாருடனும் இது மாதிரியான இணைப்புகளை ஏற்படுத்த ஆராய்ந்து வருகிறோம் என்று ஜெய்ராம் ரமேஷ் "ரைம்ஸ் ஒவ் இன்டியா" பத்திரிகைக்கு கூறியுள்ளார்.
`பவர் கிரிட்' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஆரம்பகட்ட அறிக்கையில்;
2009-10 ஆம் ஆண்டுகளில் 500 மெகாவாட் மின்சாரத்தை இரு நாடுகளும் பரிமாறிக்கொள்ள முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அளவிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட பின் இதனை 1000 மெகாவாட்டாக அதிகரிக்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்தியா 16 சதவீத மின்சாரப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. இலங்கைக்கு 1660 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது.
ஆனால், மிதமிஞ்சியோ அல்லது அதிகளவு பற்றாக்குறையோ இலங்கைக்கு இல்லை. நீர்மின்சாரத்தின் மூலமே அரைவாசி மின்சக்தி தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. மீதித் தேவை அதிகளவு செலவுடன் எரிபொருட்களைப் பயன்படுத்தி பூர்த்தி செய்யப்படுகிறது.
பருவமழை குறைந்து கடும் வரட்சி ஏற்படும் வேளைகளில் மின்சாரத்தட்டுப்பாட்டை இலங்கை எதிர்நோக்குகிறது.
இரு நாடுகளுக்குமிடையில் இணைப்பை ஏற்படுவதன் மூலம் விவசாய எரிபொருட்களைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்வதை இலங்கை குறைப்பதற்கு உதவியாக அமையுமெனவும் மலிவான முறையில் மின்சக்தியை பெற முடியுமெனவும் கூறப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை மேலதிகமாக மின்சக்தியை சந்தைப்படுத்த வாய்ப்புக்கிட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.