Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 22, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Main News
உத்தரவாத விலையில் போதியளவு அரிசி இல்லை
[22 - April - 2008] [Font Size - A - A - A]
* சில இடங்களில் அதிக விலைக்கு வாங்குவதாக மக்கள் முறைப்பாடு

எம்.ஏ.எம்.நிலாம்

அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கு அரிசியை வழங்க மொத்த வியாபாரிகளும், நெல் ஆலை உரிமையாளர்களும் உடன்பாட்டுக்கு வந்துள்ள போதிலும் நேற்று திங்கட்கிழமையும் மொத்த வியாபாரிகளிடமோ, சில்லறை வர்த்தகர்களிடமோ பாவனையாளருக்கு போதிய அரிசி கிடைக்கவில்லை. நெல் ஆலை உரிமையாளர்களிடமிருந்து அரிசி வந்தால் மாத்திரமே அரிசியை சந்தைக்கு விட முடியுமென மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அரிசிக்கு உத்தரவாத விலையை பிரகடனப்படுத்தியதனையடுத்து உருவான நெருக்கடிநிலை காரணமாக அரிசி வாங்கச் செல்லும் பொதுமக்கள் வெறுங்கையுடன் வீடுதிரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொழும்பு பழைய சோனகத்தெருவில் ஒரு சில மொத்த வியாபாரிகள் தம்மிடமிருந்த சிறிய தொகை கையிருப்பை உத்தரவாதவிலைக்கு சந்தைப்படுத்திய போதிலும் புறக்கோட்டை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை உட்பட தலைநகர் கொழும்பின் ஏனைய சகல பிரதேசங்களிலும், கொழும்புக்கு வெளியே சுற்றுப் புறங்களிலும் நேற்றைய தினமும் அரிசிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டதன் பின்னர் எந்த விலைக்கும் அரிசி கிடைக்கவில்லையே என்று பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன அவசரக்கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இக்கூட்டத்துக்கு பெரிய நெல் ஆலை உரிமையாளர்களும், சிறிய ஆலை உரிமையாளர்களும், புறக்கோட்டை மொத்த வியாபாரிகளும், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தூதுக்குழுவும் அழைக்கப்பட்டிருந்தது.

வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சருடன் அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எம்.கே.இரட்னாயக்கா, நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

நெல் ஆலை உரிமையாளர்கள் அரிசிக்கான சில்லறை விலையை அதிகரிக்குமாறு வலியுறுத்தினர். ஆனால் அமைச்சர் பந்துல குணவர்தன அதற்கு சம்மதிக்க முடியாதெனக்கூறி கோரிக்கையை அடியோடு நிராகரித்தார். எனினும், நீண்ட நேரம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் சம்பா அரிசியின் சில்லறை விலையை 70 ரூபாவாகவும் ஏனைய நாட்டரிசி, வெள்ளை, சிவப்பு பச்சை அரிசிகளின் சில்லறை விலை 65 ரூபாவாகவும் சந்தைப்படுத்த உடன்பாடுகாணப்பட்டது.

இந்த சில்லறைவிலைக்கு ஏற்ற விதமாக நெல் ஆலை உரிமையாளர்களும், மொத்த வியாபாரிகளும் தமக்குள் பேசி மொத்த விலையை நிர்ணயித்துக் கொள்ளுமாறு விவகாரத்தை அவர்களிடமே அமைச்சர் விட்டு விட்டார்.

இதேவேளை, அரிசிக்கான உத்தரவாத விலை தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்ட நிலையிலும் நெல் ஆலை உரிமையாளர்களிடமிருந்து மொத்த வியாபாரிகளுக்கு அரிசி வந்துசேர இன்னும் ஒருவாரம் அல்லது பத்து நாட்கள் பிடிக்கலாமென மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கையிருப்பிலிருந்த அரிசித்தொகை முடிவடைந்து விட்டதாகவும் நெல் ஆலை உரிமையாளர்களிடமிருந்து அரிசி வந்தால் தான் சில்லறை வியாபாரிகளுக்கு அரிசியை வழங்க முடியுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அரிசிக்கான தட்டுப்பாடு முற்றாக நீங்கிவிடுமெனவும் தற்போது ஏற்பட்டிருப்பது தற்காலிகத்தட்டுப்பாடே எனத் தெரிவித்திருக்கும் அமைச்சர் பந்துல குணவர்தன, நெல் ஆலை உரிமையாளர்களிடமிருந்து உள்ளூர் அரிசியும் இறக்குமதி செய்யப்படும் அரிசியும் இவ்வார இறுதிக்குள் அல்லது அடுத்த வார முற்பகுதியில் வந்து சேருமெனவும் அதன்பின்னர் தட்டுப்பாடு முற்றாக நீங்கிவிடுமெனவும் குறிப்பிட்டார்.

அடுத்து வரும் நாட்களில் அரிசிக்குப் பஞ்சம் ஏற்படுமென எவரும் அஞ்ச வேண்டியதில்லை எனவும், தட்டுப்பாட்டின்றி தாராளமாக அரிசியை கிடைக்கச் செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இது இவ்விதமிருக்க, தலை நகரிலும் வெளியூர்களிலும் அரிசிக்கு பெரும் தட்டுப்பாடு காணப்பட்ட நிலையில் ஒரு சில கடைகளில் சம்பா அரிசி 85 முதல் 90 ரூபா வரை விற்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவாத விலைபற்றி வர்த்தகர்களிடம் கேள்வி எழுப்பினால் 80 ரூபாவுக்கும் 85 ரூபாவுக்கும் வாங்கிய அரிசியை 70 ரூபாவுக்குத் தரமுடியுமா எனக் கேள்வி எழுப்பினர்.

அடுத்தது தமிழ், சிங்கள புதுவருடத்துக்குப் பின்னர் தங்களது கடைகளுக்கு இன்னமும் அரிசி வரவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com