வெ. நல்லதம்பி
தாய்மொழிகளின் அருமைபெருமைகளை உணர்ந்த ஐ.நா. நிறுவனம் 2000 ஆவது ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டிலும் பெப்ரவரி 21 ஆம் திகதியை உலகத் தாய்மொழி நாளாக அறவித்து வந்துள்ளது.
இந்த நிலையில் 2008 ஆம் ஆண்டை `உலக மொழிகளின் ஆண்டாகவே' தற்போது அறிவித்துள்ளது.
இந்த ஆண்டில் முன்வைக்கடுப்பட்டுள்ள மையக்கருத்து `மொழிகள் முக்கியமானவை' என்பதாகும். அதற்குக் காரணங்கள் பல. மொழிகள் இனங்களை அடையாளம் காட்டுவன, அந்தந்த இனமக்களின் அமைதியான வாழ்வுக்கு அடிப்படையாகத் திகழ்வன, தத்தமது சமுதாய ஒருமைப்பாட்டுக்கு உதவுவன. நிலையான வளர்ச்சிக்கு வழிவகுப்பன பசியையும் பிணிகளையும் உலகிலிருந்து அகற்ற முன் நிற்பன, பண்பாட்டின் சின்னமாகப் பரிணமிப்பன, அனைத்துக்கும் மேலாகா அறியாமையை அகற்ற உதவும் கல்வியை அனைவருக்கும் வழங்கும் ஆற்றல் மிக்க கருவிகளாக விளங்குவன.
தற்போது உலகெங்கும் 7000 மொழிகள் வரை பேச்சு வழக்கிலும் மேலும் பல்லாயிரக்கணக்கானவை ஏட்டில் இடம்பெறாத நிலையிலும் உள்ளன.
ஏட்டில் இடம்பெற்று பேச்சில் இடம்பெறாத மொழிகள், ஏட்டிலும் பேச்சிலும் இடம்பெற்று இலக்கிய வளம் பெறாத மொழிகள், இலக்கிய வளம் பெற்று ஆட்சியில் இடம்பெறாத மொழிகள் என்று பலதரத்து மொழிகளின் நிகழ்காலம், வருங்காலம் அனைவரின் கவனத்துக்கும் உரியவை ஆகின்றன. வளமான மொழிகளிலேயே கூட ஆயிரக்கணக்கான மொழிகள் இன்னும் கல்வி மொழியாக, ஊடக மொழியாக, கணினி மொழியாக, மக்கள் தொடர்பு மொழியாக ஆக்கப்படவில்லை. இதனைக் குறிப்பிடுபவர் ஐ .நா.வின் உறுப்பு நிறுவனமான யுனெஸ்கோவின் தலைமை இயக்குநர் கோய்ச்சிரோ மட்சுரா.
அவரது அடுத்த கூற்று நம்மில் பலருக்குச் சற்று அச்சமூட்டுவதாகக் கூட இருக்கலாம். இப்போது பேச்சு வழக்கில் உள்ள சுமார் 7000 மொழிகள் சரிபாதி அடுத்த சில தலைமுறைகளுக்குள்ளேயே காணாமல்போய்விடும் ஆபத்து உள்ளது என்கிறார் அவர்.
அவரது கருத்தை எதிரொலிப்பது போல மேலும் இருவர் `இருவாரங்களுக்கு ஒரு மொழி' என்ற வீதத்தில் மொழிகள் பல அழியும் ஆபத்துள்ளது என்றும் அந்த உண்மை அவுஸ்திரேலியாவில் தொடங்கி சைபீரியா வரையிலும், ஏன் அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலம் வரையிலும் கூடப் பொருந்தும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். அப்படிக் கூறுவோர் ஹாரிசன், கிரிகோரி ஆண்டர்சன் என்னும் இரு அமெரிக்க மொழியியல் அறிஞர்கள்.
மொழிகள் அழிந்தால் அது மொத்த மனித குலத்துக்குமே நஷ்டம் என்கிறார்கள் மொழி வல்லார். மொழிகளின் எண்ணிக்கை குறைந்தால் சிந்தனைகள் குறையும் என்கிறார் ரோஸ்மேரி ஆஸ்ட்லர்.
மொழிகளின் அழிவு மனித உடல் நலத்துக்கே கூட அழிவு என்கிறார் ஸ்டீபன் ஊர்ம். தம் கூற்றுக்கு ஆதாரமாக அவுஸ்திரேலிய அனுபவம் ஒன்றை மேற்கோள் காட்டுகிறார் ஸ்டீபன்.
ஒருவகைத் தோல் புற்று நோய், வட அவுஸ்திரேலியாவில் மாபெரும் தொற்று நோயாகப் பரவி வந்த காலத்தில் மேற்கத்திய மருத்துவ முறைகளில் பயின்று வந்த செவிலியப் பெண்மணி அங்கு மருத்துவப் பணியாற்றினார். அவரை மலைவாசிகள் சிலர் சந்தித்தனர்.
ஒருவகை மூலிகைச் செடியின் சாறு அந்தப் புற்றுநோயைக் குணமாக்க வல்லது என்று குறிப்பிட்டனர். அவர்கள் தந்த தகவலை அந்தச் செவிலியர் உதாசீனப்படுத்தாமல் அப்படியே பின்பற்றினார்.
வட அவுஸ்திரேலிய மக்கள் தொற்று நோயாகப் பரவிய தோல் புற்று நோயிலிருந்து தப்பினார்கள். அந்த மலைவாசிகளின் மொழி இல்லாது போயிருக்குமானால் நிலைமை என்னவாகியிருக்கும் என்று கேள்வி எழுப்புகிறார் ஸ்டீபன்.
மலைவாழ் மக்களின் மொழிகளுக்கு மட்டுமல்ல செல்வாக்கில்லாத வேறுபிற சிறுபான்மையினரின் மொழிகளுக்கும் கூட அழிவு, ஆபத்திருப்பதை உணர்வது நல்லது.
இன்று `உலகமயமாக்கல்' என்ற புதியதோர் அலை வேகமாக வீசி வருகிறது. அத்துடன், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும் அகிலம் எங்கும் தழைக்கிறது. அவற்றின் விளைவாகப் பல சமுதாயங்கள் மாறுதல்களை சந்தித்து வருகின்றன.
குறிப்பாக இளைஞர்கள் தத்தம் மொழி, பண்பாடு, ஆடைப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைக் கைவிட்டு விடும் நிலை ஏற்பட்டு வருகிறது. உலகின் செல்வாக்கு மிக்க மொழி, பண்பாடு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றுக்கு அவர்கள் மாறும் நிலை உருவாகி வருகிறது. அது இன்றைய உலகின் பன்மொழிப் போக்கிற்கு எதிரான நிலை.
மொழிகளின் அழிவைத் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள யுனெஸ்கோ நிறுவனம் அதற்கான ஒரு திட்டமாக ஒவ்வொரு மொழிக் குடும்பத்தாரும் தத்தம் மொழியை- தாய்மொழியாம் முதல் மொழியை- தங்குதடையின்றி எல்லாத் துறைகளிலும் புகுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
தாய் மொழியை அனைத்து மக்களும் கற்றுப் பயன்படுத்துவதுடன் தேசிய மொழி ஒன்றையும் பன்னாட்டு மொழி ஒன்றையும் கூடக் கற்றுக் கொள்வது நல்லதே என்கிறார் தலைமை இயக்குநர்.
பன்மொழிப் புலமை என்பது ஒருவருக்குச் செல்லும் இடமெல்லாம் நல்லதே விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை. `கற்றாருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்பது பழந்தமிழ் வாக்கு.
உலகமயமாகும் இக்காலச் சூழலில் பல மொழிகளையும் ஒருவர் தெரிந்து வைத்திருந்தால் அவருக்கு வேலைவாய்ப்பு சிறப்பாக அமையும் தான்.
ஐ.நா. அமைப்பு உலக நாடுகள் அனைத்துக்கும் உரிய ஒரு பொது நிறுவனம். அது இந்த ஆயிரமாம் ஆண்டுகளுக்கென சில இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு செயற்பட்டு வருகின்றது.
வறுமை, பசி ஒழிப்பு (MDG 1), அனைவருக்கும் ஆரம்பக்கல்வி (MDG 2), மலேரியா, எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கெதிரான நடவடிக்கை (MDG 6), சுற்றுச் சூழல் பாதுகாப்பு (MDG 7) என்று பல்வேறு வகையான திட்டங்களையும் இலக்குகளையும் அமைத்துக் கொண்டு அவற்றைச் செயற்படுத்த முனைந்திருக்கிறார்.
திட்டங்களின் வெற்றி அனைத்து மக்களின் ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டது. அந்த ஒத்துழைப்பைப் பெற அந்தந்தப் பகுதி மக்களை நாட வேண்டும். அவ்வாறு அவர்களை நாட அந்தந்தப் பகுதி மொழிகளின் துணை வேண்டும். ஆகவே, பல மொழிகள் முக்கியமானவை தான்.
`வேற்றுமையில் ஒற்றுமை காண்பது' என்பது உயர் நெறி. அந்த நெறியில் நின்று பல மொழிகளையும் மதித்து வாழ வேண்டும் என்னும் உண்மையை உலகத்தார் அனைவரும் ஏற்றுக்கொள்வது மேன்மை.
சீர்திருத்தம் முதலில் சொந்த வீட்டில் தொடங்கப்பட வேண்டும் என்பார்கள். அதற்கிணங்க ஐ.நா. தாம் ஏற்றுக் கொண்ட ஆறு மொழிகளுக்குள்ளும் (ஆங்கிலம், பிரெஞ்சு, சீனம், ஸ்பானிஷ், ரஷியன், அராபிக்) வேறுபாடு எதுவும் காட்டாமல் அனைத்தையும் சமமாகக் கருதிச் செயற்பட வேண்டும் என்றும் தம் அறிக்கைகள், ஆவணங்கள் அனைத்தையும் ஆறு மொழிகளிலும் உடனடியாக வெளியிடுவதோடு ஆறு மொழிப் புலங்களுக்குமான வளங்களையும் வாய்ப்புகளையும் சமமாகத் தருவதென்றும் முடிவு செய்து முனைப்பாகச் செயற்படத் தொடங்கிவிட்டது.
உலக நிறவனத்தின் செயற்பாட்டை முன்னுதாரணமாகக் கொண்டு நாடுகள் பலவும் தத்தமது மொழிகள் பலவற்றுக்கும் சமமான மதிப்பும் வளமும் வழங்க வேண்டும். எதிர்வரும் காலத்தில் மக்கள் சமுதாயம் சந்திக்க இருக்கும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளப் பல்வேறு மொழிகளும் முக்கியமானவையே ஆகும். தினமணி