வ.திருநாவுக்கரசு
ஜே.வி.பி.யிலிருந்து பிளவுண்டுள்ள பிரிவின் தலைவர் விமல் வீரவன்ச கடந்த 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஆற்றிய பரிதாபமான உரையில், தான் கட்சிக்குச் செய்த தியாகங்கள் காரணமாக பிரபல்யமான சில இடங்களைச் சென்று தரிசிக்க முடியாமற் போனது மடடுமல்லாமல் தனது இளமையையும் தொலைத்துவிட்டதாக வேதனை வெளிப்படுத்தியிருந்தார். சென்றவாரம் அவர் கண்டி நகர் சென்று மகாநாயக்க தேரர்கள் முன்னிலையில் முளந்தாளிட்டு வணங்கி பரிசுப் பொதி வழங்கி ஆசி பெற்றுக் கொண்டார். குறிப்பாக, மல்வத்தை பீட மகாநாயக்க தேரர் வீரவன்ச மிகத் திறமையானவர், வெகு திறமையாகச் செயற்பட்டுவந்தவர் என்றெல்லாம் வாயாரப் புகழாரம் வழங்கியிருந்தார்.
வீரவன்ச ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளராகவும் பாராளுமன்றக் குழுத் தலைவராகவும் விளங்கி வந்தவர். அதுமட்டுமல்லாமல் "தேசபக்த தேசிய இயக்கத்தின்" செயலாளராகவும் "மானெல் மல்" எனும் இராணுவ சார்பான இயக்கத்தின் முக்கியஸ்தராகவும் விளங்குபவர். தேசிய இனப் பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு வழி சமைக்கக்கூடியதும் கடல்கோளுக்குப் பின் புனர்நிர்மாணக் கட்டமைப்பு (P-TOMS) என ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுமான திட்டத்தினை உச்ச நீதிமன்றம் சென்று தள்ளுபடி செய்வதற்கு முன்னின்று அயராது உழைத்தவர். அதேபோல் 18 வருடங்களாக இணைக்கப்பட்டிருந்த வடகிழக்கு மாகாணத்தைக் கூறு போடுவதற்கும் நீதித்துறையை நாடுவதற்கும் முன்னின்று உழைத்தவர். இவற்றின் பொருட்டு உறுதுணையாய் நின்ற மூத்த சட்டத்தரணிகளாகிய எச்.எல்.டி. சில்வா, எஸ்.எல்.குணசேகர, கொமின் தயாசிரி ஆகியோரோடு மிக நெருக்கமாகவும் வீரவன்ச பழகி வந்தவர்.
மற்றும் விடுதலைப் புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட வேண்டுமென்ற போர்வையில் யுத்தம் படு கோரமாக நடத்தப்பட வேண்டுமென்பதிலும் வீரவன்ச அதி தீவிரமாகச் செயற்பட்டுவந்தவர். இராணுவ முகாம்கள் சென்று படையினருக்கு தூண்டுதல் அளித்து வந்தவர். உதாரணமாக அவர் ஒரு தடவை எழுதுமட்டுவாள் முகாம் சென்று அங்குள்ள தளபதியே சினந்து கொள்ளுமளவுக்கு யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்கள் எல்லோரும் தமிழர்கள்தானே கடுமையாக விமானக் குண்டு வீச்சு போன்ற தாக்குதல்களை நடத்த வேண்டியதுதானே என்றெல்லாம் அறிவுரை வழங்கியவர். இவ்வாறாகச் செயற்பட்டவராகிய வீரவன்சவையே மல்வத்தபீட மகாநாயக்க தேரர் பாராட்டியிருந்தார். அத்தோடு நின்றுவிடாமல் வீரவன்ச பிரிவினர் ஜே.வி.பி.யுடன் மீண்டும் ஐக்கியப்பட முடியாத பட்சத்தில் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு ஆதரவளித்துச் செயற்படுமாறு மகாநாயக்க தேரர் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதனிடையில் "விமல் அரசாங்கத்தின் ஒரு பொம்மை" என ஜே.வி.பி.யின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான விஜித்த ஹேரத் வர்ணித்ததோடு, விமல் வீரவன்ச கட்சிக்குள் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலைச் செயற்படுத்தி ஜே.வி.பி.யை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பொம்மையாக வைத்திருக்கத் தலைப்பட்டவர் எனவும் காரசாரமாகச் சாடியுள்ளார். மற்றும் வீரவன்ச பிரிவினர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டால் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் தடங்கல் ஏற்படக்கூடுமாயினும் பாராளுமன்றத்தில் அரசாங்கம் பலமடைந்துவிடுமென விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண கூறியுள்ளதாக அறியப்படுகிறது. எது எப்படியிருந்தாலும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வீழ்ந்துவிடக்கூடாது என்பதில் அமைச்சர் விதாரண குறியாயிருக்கின்றார் என்பதைக் காணமுடிகிறது.
நிற்க, ஜே.வி.பி.யில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக,"தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தேடும் முயற்சியில் ஒரு மாற்றம் ஏற்படலாம். ஜே.வி.பி. தனது மார்க்ஸிய கொள்கையை சற்று ஆழமாக நோக்கி சிறுபான்மையினங்களின் உரிமைகளை உள்வாங்குவதற்கு வாய்ப்பு ஏற்படலாம். அவர்கள் சிறிது காலம் சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுத்தவர்கள்" என பிரபல அரசியல் ஆய்வாளர் ஜெஹான் பெரேரா சென்ற வாரம் எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தார். ஜே.வி.பி.யினர் மார்க்ஸிஸவாதிகளென சில பத்தியாளர்கள் எழுந்தமானமாகக் குறிப்பிட்டு வந்துள்ளதை நாம் அவதானித்திருக்கிறோம். அவர்கள் உண்மையான மார்க்ஸியவாதிகள் அல்ல என்பது சகலராலும் சரியாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டியது முக்கியமானதாகும்.
ஜே.வி.பி.யின் குணாம்சம்
ஜே.வி.பி. தொடர்பாக 2005 இல் விக்ரமபாகு கருணாரத்ன வெளியிட்ட கைநூலொன்றில் வெளிப்படுத்திய ஒரு சில கருத்துக்களை இச்சந்தர்ப்பத்தில் நினைவூட்டுவது சாலப்பொருத்தமாயிருக்குமென நினைக்கின்றேன். அது ஒரு விரக்தியுற்ற படித்த சிங்கள இளைஞரைக் கொண்ட குட்டி முதலாளித்துவ பேரினவாதக் கட்சி. 1870 களில் இடம்பெற்றதாகிய "பாணந்துறை விவாதம்" வாயிலாகவே சிங்கள- பௌத்த அடையாளம் துளிர் விட்டிருந்தது. பிந்திய கால கட்டத்தில் அதாவது 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அநகாரிக தர்மபால என்ற சிங்கள தேசியவாதி சற்று ஏகாதிபத்திய எதிர்ப்புச் செயற்பாட்டில் பயணிக்கத் தலைப்பட்டவராயினும் அது உண்மையில் ஏலவே துளிர் விட்டிருந்ததாகிய சிங்கள- பௌத்த நிலைப்பாட்டினைப் பலப்படுத்தும் இயக்கமாகவே பரிணமித்தது. இதனை மேலும் கட்டியெழுப்பும் வகையிலேயே 1950களில் பண்டாரநாயக்க "சிங்களம் மட்டும்" சட்டத்தினைக் கொண்டுவந்தவர். அத்தோடு, அரசு சிங்கள- பௌத்த சார்பு கொண்டதாக ஏற்படுத்தப்பட்டது; குறிப்பாக, ஆயுதப் படையினர் சிங்கள- பௌத்த கொள்கை சார்பாக வழி நடத்தப்பட்டனர். சுருங்கக் கூறின், சிங்கள மக்கள் வாதம் (populism) எனும் கருத்தியல் ஒன்றினை ஏற்படுத்தி விட்டவர். ஒரு அஞ்சலோட்டப் பாணியிலேயே அந்த சிங்கள மக்கள் வாதமானது 1960களில் தோற்றம் பெற்ற ஜே.வி.பி.யினால் முன்னெடுக்கப்பட்டு, நஞ்சு நிறைந்த பேரினவாதமாகப் பரப்பப்பட்டு வந்துள்ளது. விக்ரமபாகு கருணாரத்ன இது தொடர்பாக பின்வருமாறு விளக்கியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். "அது (ஜே.வி.பி.) பெரும்பான்மை இனத்தின் அதாவது இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் பேரினவாதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இவ்வாறாக முதலாளித்துவ கொள்கைகளை வலுவூட்டுவதன் மூலம் ஜே.வி.பி. அடக்குமுறை சக்திகளை ஆதரிக்கிறது என்பதே அர்த்தமாகும். அதன் அண்மைக்கால வரலாற்றினைப் பார்க்குமிடத்து அது திரும்பத் திரும்ப பயங்கர அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டிருந்த போதும் அது வரித்துக் கொண்ட நிலைப்பாடானது, அடக்குமுறை அரச எந்திரத்தைப் பலப்படுத்த வல்லதாகவே அமைந்துள்ளது. அதன் மூலம் அரசு எல்லா இடதுசாரிகளுக்கும் எதிராகக் காய்கள் நகர்த்துவதற்கு வழி சமைக்கப்பட்டது.
அன்று பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகச் செயற்பட்ட சிங்கள தேசியவாதம் தற்போதைய முதலாளித்துவ அரசின் அடக்குமுறையினைக் கொண்டு நடத்தும் கொள்கையாக அமைந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆனால், இதனையே ஜே.வி.பி. இடையறாது மூடிமறைத்து வந்துள்ளது. மற்றும் ஜே.வி.பி.யினால் கட்டியெழுப்பப்பட்டதாகிய தேசபக்த தேசிய இயக்கம் (PNM) நிச்சயமாக இதனையே உணர்த்துகிறது. உலகமய முதலாளித்துவத்தின் முகவர்கள் இந்த நாட்டில் இன்னும் சக்திவாய்ந்தவர்களாயுள்ளனர். எவ்வாறாயினும், தரகு முதலாளித்துவ சர்வதிகாரமானது சிங்கள பேரினவாதம் மெருகூட்டும் அரசினாலேயே பேணப்படுகின்றது. எனவே, தரகு முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கெதிரான போராட்டம் சிங்கள தேசிய வாதக் கொள்கையின் மூலம் நடத்த முடியாது. அதற்கு அவசியமான வெகுஜனப் போராட்டங்களுக்கு ஜே.வி.பி. போன்ற குட்டி முதலாளித்துவ கட்சிகளால் தலைமை தாங்க முடியாது. ஏனென்றால், ஜே.வி.பி. தான் சிங்கள தேசிய வாதத்தின் பிரதான வாரிசு என வரிந்து கட்டி நிற்கிறது. அந்த அடிப்படையில் சிஹல உறுமயவை பின்தள்ளுவதோடு, ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடித்தளத்தையும் இலக்குவைத்துச் செயற்பட்டு வருகின்றது. எனவே தான், உலகமய முதலாளித்துவக் கொள்கையை விட தமிழ் பேசும் மக்களின் நியாயமான கோரிக்கைகள் மீதுதான் ஜே.வி.பி. அச்சம் கொண்டுள்ளது எனலாம். அதாவது, ஒரு "அல்சேசன்" நாய் கட்டிவைக்கப்பட்டிருந்தால் அதனால் ஒரு வித பிரயோசனமும் இல்லை. எனவே, பேரினவாதத்தினால் விலங்கிடப்பட்டிருக்கும் ஜே.வி.பி.யினால் ஒருபோதும் உலகமய முதலாளித்துவத்தின் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாது."
எனவே, போலி வைத்தியர்கள் போல் செயற்பட்டு வந்த ஜே.வி.பி.யின் பொட்டுக்கேடு தற்போது யாவருக்கும் தெட்டத்தெளிவாகத் தெரிகிறது. ஆக, உண்மையான இடதுசாரிகளும் முற்போக்கு சக்திகளும் ஒரு ஐக்கிய முன்னணியாகத்திரண்டு பலமானதொரு இடதுசாரி இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தலைப்படுவதே இன்றைய சவாலும் சந்தர்ப்பமும் ஆகும்.