Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 23, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Editorial
ஒற்றை ஆட்சியும் சமஷ்டியும் இணைந்த ஒரு தீர்வு?
[23 - April - 2008] [Font Size - A - A - A]
பிரித்தானியாவுக்கும் வட அயர்லாந்துக்கும் விஜயத்தை மேற்கொண்டிருந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு, தன்னுடைய இறுதி அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் இப்போது முழு வேகத்துடன் இறங்கியிருக்கிறது. வட அயர்லாந்துப் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணப்பட்டது என்பதையும் பிரித்தானிய அரசியலமைப்பில் அதற்காகச் செய்யப்பட்ட திருத்தங்கள் எவை என்பதையும் ஆராய்ந்து அறிவதும் அந்த அனுபவத்தை இலங்கைப் பிரச்சினைக்கு எவ்வாறு கையாள முடியும் என்பதைக் கண்டறிவதும் தான் இந்தக் குழுவின் உறுப்பினர்கள் அந்த நாடுகளுக்கு மேற்கொண்ட விஜயத்தின் பிரதான நோக்கம்! இந்தப் பின்னணியில் இலங்கை நெருக்கடிக்கு சமாதான வழிமுறைகளில் தீர்வொன்றைக் காண்பதில் பிரித்தானிய அனுபவம் எந்தளவுக்கு உதவும் என்பதுதான் இப்போது எழுகின்ற பிரதான கேள்வி. சரித்திரத்திலிருந்து எதையுமே கற்றுக்கொள்ளாதவர்கள்தான் எமது நாட்டு அரசியல்வாதிகள். அதேபோல, ஏனைய நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்வதை விரும்பினாலும் அந்த நாட்டு அனுபவங்களிலிருந்து எதனையும் கற்றுக்கொள்வதையும் அவர்கள் விரும்புவதில்லை. இந்த நிலையில், அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவுக்கு பிரித்தானிய அனுபவம் மட்டும் வழிகாட்டும் என நம்புவதில் அர்த்தமிருக்கப்போவதில்லை.

பிரித்தானிய விஜயத்தின் முடிவில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ள தகவல்கள் இந்த சந்தேகத்தை மேலும் அதிகரிப்பதாகவே இருக்கின்றது. இன நெருக்கடிக்கான தீர்வு முயற்சிகளைப் பொறுத்தவரையில் ஒற்றையாட்சியா? சமஷ்டியா? என்ற கேள்விதான் சர்ச்சைகளுக்கும் குழப்பங்களுக்கும் காரணமாக இருக்கின்றது. ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஒற்றையாட்சி முறை மூலமான தீர்வு ஒருபோதுமே உதவியதில்லை என்பது உண்மை. ஆனால், ஒற்றையாட்சியை விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் சிங்கள அரசியல் கட்சிகள் மத்தியில் உள்ளதா என்பதுதான் முக்கிய கேள்வி! சமஷ்டியா, ஒற்றையாட்சியா என்ற சர்ச்சைக்கு புதிய முறையிலான தீர்வு ஒன்றைக் காணப்போவதாக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்திருக்கின்றார். அதாவது, சமஷ்டியின் அம்சங்களையும் ஒற்றையாட்சி முறையின் அம்சங்களையும் கலந்ததான ஒரு தீர்வையே தான் முன்வைக்கப்போவதாகத் தெரிவித்தார். ஒற்றையாட்சி என்பதைக் கைவிட்டுவிடவோ அல்லது சமஷ்டி என்பதனை ஏற்றுக்கொள்வதற்கோ மூன்று அரசியற் கட்சிகள் திட்டவட்டமான முறையில் மறுப்புத் தெரிவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இருந்த போதிலும் தன்னால் இப்போது தயாரிக்கப்பட்ட திட்டத்துக்கு அனைத்துக் கட்சிகள் பிரதிநிதிகள் குழுவின் 90 வீதமான ஆதரவு உள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த முரண்பாடுகள் தீர்த்து வைக்கப்பட்ட பின்னர் இந்த யோசனையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் சமர்ப்பிப்பதற்கும் குழு திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளினதும் சம்மதத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் அங்கீகாரம் பெறப்படும் எனவும் ஒரு சில மாதங்களுக்குள் இவை அனைத்தும் சாத்தியமாகும் எனவும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பேராசிரியர் இவ்வாறான நம்பிக்கைகளை முன்னரும் பல சந்தர்ப்பங்களில் முன்வைத்தவர் என்பதால் அவரது நம்பிக்கையில் நம்பிக்கை வைக்கக்கூடிய நிலையில் நாட்டு மக்கள் இல்லை. அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு என்பது உண்மையில் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கியதாக இல்லை என்பதும் கவனிக்கப்படவேண்டும். பிரதான சிங்களக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி. என்பன இதில் அங்கம் பெறவில்லை. இவ்விரு கட்சிகளும் அதிலிருந்து வெளிநடப்புச் செய்திருக்கின்றன. அதனைவிட முக்கியமானது- பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசிய முன்னணி இந்த குழுவுக்கு அழைக்கப்படவேயில்லை. பிரதான தமிழ் அரசியல் கட்சியைத் தவிர்த்துவிட்டு காணப்படக்கூடிய தீர்வு எவ்வாறானதாக இருக்கும் என்பதையிட்டுச் சொல்லத்தேவையில்லை.

இந்த இடத்தில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விடயமும் இருக்கின்றது. அதாவது இந்த நாட்டில் அடக்குமுறைக்கு அல்லது ஒடுக்குமுறைக்குள்ளானவர்கள் தமிழர்கள். உரிமை கோரி போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் தமிழர்கள். அதனால்தான், தமிழர்களுடைய நியாயமான அபிலாஷைகளை நிறைவு செய்யக்கூடியதாக எந்தவொரு தீர்வும் அமைந்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. இருந்தபோதிலும் அந்த நிலைமையில் இப்போது மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. அனைத்து இன மக்களினதும் அபிலாஷைகளை நிறைவு செய்யும் வகையில் தீர்வு அமைய வேண்டும் என்பதே இப்போதைய கோஷமாக உள்ளது. குறிப்பாக பௌத்த- சிங்கள மக்களுடைய அபிலாஷைகளை நிறைவு செய்வதாகவே எந்தவொரு தீர்வுத் திட்டமும் அமைய வேண்டும் என்பதில் அரசாங்கமே அதீத அக்கறையைக் காட்டுகின்றது. சிங்கள- பௌத்தர்களின் நலன்களைக் கவனிப்பதற்காகவென்றே மூன்று அரசியல் கட்சிகள் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் உள்ளன. ஒற்றையாட்சி முறையை விட்டுக்கொடுக்க முடியாதென்பதில் மூன்று கட்சிகள் பிடிவாதமாக இருப்பதாக பேராசிரியர் விதாரண குறிப்பிட்டிருப்பது அந்தக் கட்சிகளைத்தான். தமிழர்களுடைய அபிலாஷைகளைவிட, சிங்களவர்களின் அபிலாஷைகள் தொடர்பாக அதிகளவுக்குக் கவனத்தினைச் செலுத்துவதனால்தான் தமிழ்த் தேசிய முன்னணியை அனைத்துக் கட்சிகள் குழுவில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அக்கறை காட்டாத அதன் தலைவர், பேரினவாதக் கட்சிகளை அதில் இணைத்துக் கொள்வதில் மட்டும் மிகுந்த அக்கறை காட்டுகின்றார்.

ஆக, வழமைபோல நோயை சரியாக இனங்கண்டு அதற்கு சிகிச்சையளிப்பதற்குப் பதிலாக சிகிச்சையை வேறு எதற்கோ வழங்கும் போக்கில்தான் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு செல்கின்றதா என்ற கேள்விதான் இப்போதும் எழுகின்றது. இது நோயை மேலும் மோசமடையச் செய்யலாம். நோயை மூடிமறைப்பது கூட நிலைமையை மோசமாக்கும் என்பதை பேராசிரியர் உணர்ந்துகொள்வது அவசியம்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com