இஸ்லாமாபாத்:இஸ்லாமிய போராளிகளுடன் பேச்சுகளை மேற்கொள்வதற்கான பாகிஸ்தான் அரசின் முயற்சிகளுக்கு பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் தனது வெளிப்படையான ஆதரவை வழங்கியுள்ளார்.
ஆனால், வன்முறைகளைக் கைவிடத் தயாராகும் போராளிகளுடன் மட்டுமே இவ்வாறான பேச்சுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மிலிபாண்ட் நல்லிணக்கமென்பதன் அர்த்தம் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான இடத்தை உருவாக்கி கொடுப்பதல்ல எனவும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ஜனாதிபதி பேர்வேஷ் முஷாரப் மற்றும் பிரதமர் யூசுப் ரஸா கிலானி ஆகியோருடனான சந்திப்புகளின் பின்னரே மிலிபாண்ட் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.
தீவிரவாதத்தையும் பாரிய பொருளாதார சவால்களையும் எதிர்நோக்கியுள்ள பாகிஸ்தானின் புதிய அரசாங்கத்தை மிலிபாண்ட் வெகுவாக பாராட்டியுள்ளதாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், தற்போதைய கூட்டணி அரசியல் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சிகளின் தலைவர்களான நவாஸ் ஷெரீப் மற்றும் அஸிப் அலி சர்தாரி ஆகியோரையும் சந்தித்துள்ளார்.
பாகிஸ்தான் மக்களும் புதிய கூட்டணி அரசாங்கமும் அளவற்ற சவால்களை எதிர்கொள்கின்றதென்பதை மிலிபாண்ட் மறுக்காத அதேவேளை ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் எல்லைப் புறங்களில் அல்-ஹைடாவின் நடவடிக்கைகள் தொடர்வதற்கான தெளிவான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பயங்கரவாத சதிமுயற்சிகளில் ஈடுபட்டவர்களென சந்தேகத்தின் பேரில் பிரிட்டனில் விசாரணைக்குட்படுத்தப்படுவோரில் 70 சதவீதத்தினர் பாகிஸ்தான் பின்னணியைக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்த மிலிபாண்ட் பொதுநலவாய அமைப்பில் பாகிஸ்தானை மீண்டும் இணைப்பதற்கான ஆதரவையும் வழங்கியுள்ளார்.