*அமைச்சர் ஏக்கநாயக்க உறுதியளிப்பு
இடைநடுவில் கைவிடப்பட்டிருக்கும் சாய்ந்தமருது நெடுஞ்சாலையின் புனரமைப்புப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வீதி அபிவிருத்தி அமைச்சர் ஏக்கநாயக்க உறுதியளித்துள்ளார்.
அம்பாறைக் கச்சேரியில் நடைபெற்ற உயர் மட்ட மாநாட்டில் உயர் கல்விப் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எஸ்.ஏ.றஸாக், சாய்ந்த மருது நெடுஞ்சாலையின் அவல நிலை குறித்து விளக்கிக் கூறியதைத் தொடர்ந்தே அமைச்சர் ஏக்கநாயக்க இவ்வுறுதிமொழியை வழங்கியுள்ளார்.
பெரிய நீலாவணை தொடக்கம் அக்கரைப்பற்று வரையிலான நெடுஞ்சாலையை விஸ்தரிப்புச் செய்யும் திட்டத்தின் கீழ் புனர் நிர்மானம் செய்யப்பட்டு வந்த சாய்ந்த மருதுப் பகுதி பிரதான வீதியின் புனரமைப்பு வேலைகள் அரைகுறையான நிலையில் கைவிடப்பட்டுள்ளது.
இதனால் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இப்பிரதான வீதியின் ஒரு பக்கம் உயர்வாகவும் மறுபக்கம் பள்ளமாகவும் இருப்பதோடு சில இடங்கள் முற்றாக உடைந்து சிதைந்தும் கிடக்கிறது. இதன் காரணமாக இவ்வீதி ஊடாக போக்குவரத்துகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்ச்டிருப்பதோடு அடிக்கடி விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன என்று சட்டத்தரணி றஸாக் சுட்டிக்காட்டினார்.
அம்பாறை மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் வீதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பான திட்டம் குறித்து ஆராய்வதற்காக நடத்தப்பட்ட இந்த உயர்மட்ட மாநாட்டில் அமைச்சர்களான பி.தயாரட்ன, அதாவுட செனிவிரட்ன, எஸ்.நிஜாமூதீன், அரச அதிபர் சுனில் கன்னங்கர ஆகியோரும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களும் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.