எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வெல்லப் போகும் எந்தவொரு இனமும் தனித்து நின்று ஆட்சியை அமைக்க முடியாது. சில வேளைகளில் ஆட்சி அமைத்தாலும் மற்ற இனத்தின் உதவியின்றி ஆட்சியில் நிலைத்திருக்க முடியாதென திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.நௌஷாட் தெரிவித்தார்.
அண்மையில் சாய்ந்தமருது பரடைஸ் ஹோட்டலில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
"இந்தத் தேர்தலை இனவாதத் தேர்தலாக யாரும் மாற்றக் கூடாது. எது எவ்வாறு இருந்தாலும் எத்தனை அமைச்சர்கள் களத்தில் நின்றாலும் ஐ.தே.கட்சியே ஆட்சியை கைப்பற்றும் என்பதில் சந்தேகமில்லை.
முஸ்லிம்கள் இந்த நாட்டில் ஒரு மாகாண சபையை அமைக்க முடிந்த இடம் கிழக்கு மாகாணமே.இதனை இனத்துவேசத்தை கக்கி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற அவசியம் எமக்கில்லை. இதற்கு மாற்றாக நாம் இந்த மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தின் மூலம் மூவின மக்களுக்குமான இணைப்புவாதம் என்ற புதிய சித்தாந்தம் ஒன்றை அறிமுகப்படுத்தி மூவின மக்களும் விட்டுக் கொடுப்புடன் வாழுகின்ற முன்மாதிரியான மாகாண சபையாக இதனை மாற்றியமைக்க வேண்டும்.
முஸ்லிம்களின் கையில் இதன் ஆட்சி அதிகாரம் கிடைக்கப் பெற்றால் ஏனைய இனத்தவர்களுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மை காட்டப்பட மாட்டாது என்பதை முஸ்லிம் சமூகம் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு நடந்தால் தான் ஏனைய மாகாணங்களில் வாழும் முஸ்லிம் சமூகத்தை அநீதியிலிருந்து காப்பாற்ற முடியும். எல்லோரும் விட்டுக் கொடுப்புடன் வாழ்ந்தால் தான் நிம்மதியாக வாழ முடியும்.
1988 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் இணைந்த வடகிழக்கில் நடைபெற்றது. ஆனால், தற்பொழுது பிரிக்கப்பட்ட கிழக்கில் நடைபெறுகின்றது. எனவே, வாக்காளர்கள் சிந்தித்து செயல்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.