*சு.க. மட்டு. மாவட்ட பிரதம அமைப்பாளர்
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அளித்த பல வாக்குறுதிகளை மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு செவ்வனே நிறைவேற்றியுள்ளார். மற்றும் ஓரிரு கோரிக்கைகளையும் நிறைவேற்றவுள்ளார். இந்நிலையில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிலைச்சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலமே முஸ்லிம் முதலமைச்சரை பெற்றுக்கொள்ளமுடியும் என ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டு. மாவட்ட பிரதம அமைப்பாளரும் நகரசபையின் எதிர்க்கட்சி தலைவருமான றவூப் ஏ மஜீட் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் காத்தான்குடி கடற்கரை மைதானத்தில் ஸ்ரீ சு.க. உறுப்பினர்களுடன் நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே பிரதம அமைப்பாளர் றவூப் ஏ மஜீட் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்; "முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வையும் எமது கட்சி அரவணைத்து இந்த தேர்தலில் போட்டியிட வைத்துள்ளது. இதன்மூலம் கூடுதல் வாக்குகளை பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பே இந்ததேர்தலில் வெற்றிபெறும் என்பது உண்மையாகும்.
கிழக்கு மாகாணம் இன்று பாரிய அபிவிருத்தியை நோக்கி செல்கின்றது. இந்த தேர்தலில் நானும் போட்டியிட எண்ணியிருந்தாலும் இறுதி தருவாயில் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிப்பதற்காக வாக்குகளை சிதறடிக்காமல் வேட்பாளர் பட்டியலில் இருந்து விலகுமாறு அன்பான வேண்டுகோளை விடுத்தனர். அதனை நானும் ஏற்றுக் கொண்டேன். இதைப்பற்றி எனது ஆதரவாளர்கள் கவலையடைய வேண்டியதில்லை. எமக்கு தேவை எமது கட்சியின் வெற்றியே. இதற்காக நாம் ஒன்றிணைந்து கட்சியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவதே அவசியமும் அவசரமானதுமாகும்" என்றார். முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை சந்தித்து கலந்துரையாடி அவரின் வெற்றிக்காக பாடுபடுவதே எமது பணியாகும். இதற்காக இக்கூட்டத்தில் ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில் கொள்கைபரப்பு செயலாளர் எம்.அஸ்மி, ஓய்வுபெற்ற அதிபர் எம்.எச்.முஹம்மட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.