*அமைச்சர் விஸ்வ வர்ணபால
நாடு பூராவும் அமைதியை உருவாக்கி ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான செயற்பாடுகளையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கொண்டு வருகின்றார் என்று உயர்கல்வியமைச்சர் விஸ்வவர்ணபால தெரிவித்தார்.
தெரணியகல பொல்கஸ்வந்த என்ற இடத்தில் சீன அரசாங்கத்தின் 35 இலட்சம் ரூபா நிதியுதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மின்சாரத் திட்டத்தை ஆரம்பித்துவைத்த அமைச்சர் விஸ்வவர்ணபால அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
எமது அரசு யுத்தம் ஒன்றுக்கு முகம்கொடுத்து வருகின்றபோதும், அபிவிருத்தித் திட்டங்களை எந்தவொரு தடையுமின்றி முன்னெடுத்துச் செயற்படுகின்றது. கிராமப்புறங்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் பொருளாதாரமும் முன்னேற்றமடையும்.
கிராமப்பகுதிகளை இலக்குவைத்து அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதே எமது ஜனாதிபதியின் நிலைப்பாடாகும்.
கமநெகும, ஜாதிகசவிய போன்ற திட்டங்களால் வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
கிழக்கு மாகாணத்தை பயங்கரவாதப் பிடியிலிருந்து மீட்டெடுத்து தேர்தலை நடத்தி ஜனநாயக ரீதியில் தங்களது உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து அந்த மக்களின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து சுதந்திரமான சூழலை உருவாக்கியுள்ளோம்.
கிழக்கு மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்துவரும் வேளையில் பிரபாகரனின் ஈழராஜ்ஜிய கனவை தோல்வியடையச் செய்துள்ளோம். அதிகாரப்பரவலாக்கலை வழங்குவதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணலாம். அவ்வாறான முயற்சி முன்னெடுக்கப்பட்டுவரும் வேளையில் மக்கள் விடுதலை முன்னணியினர் இந்தியாவின் அதிகாரப் பரவலாக்கத் திட்டத்தை இங்கு அமுல்படுத்த நடவடிக்கை எடுத்தமைக்கு எதிராக வீதியில் இறங்கி போராடப்போவதாக அச்சுறுத்தி நின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.