*தேயிலை ஆணையாளர் எச்சரிக்கை
இவ்வருடம் தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு நிவாரணநிதியாக கோடிக்கணக்கான ரூபா பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிவாரணங்களைப் பெற்றுக்கொண்டும் தரமான தேயிலையை உற்பத்தி செய்யாத தொழிற்சாலை அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்படும் என்று தேயிலை ஆணையாளர் நிமல் உடுகம்பொல எச்சரித்துள்ளார்.
ஸ்ரீலங்கா தேயிலை சபையின் மாத்தறை மாவட்ட தேயிலை உற்பத்தி தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு தரமான தேயிலை உற்பத்தி செய்தல் பற்றிய கருத்தரங்கிலேயே அவர் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்தார்.
இந்தக் கருத்தரங்கு மாத்தறை வலித ஹோட்டலில் இடம்பெற்றபோது ஆணையாளர் நிமல் உடுகம்பொல, மேலும் கூறியதாவது;
உலக சந்தையில் சிறந்த தரமான தேயிலைக்கு மிகக் கிராக்கியான கேள்விகள் இன்றும் இருந்து கொண்டிருக்கின்றன. ஆனால், தரக்குறைவான தேயிலையை ஏற்றுமதி செய்தால், நாளடைவில் அந்த ஏற்றுமதிகள் குறைந்துவிடும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
எமது நாட்டிலுள்ள 662 தேயிலைத் தொழிற்சாலைகளுள் 100 தொழிற்சாலைகள் மாத்தறை மாவட்டத்திலுள்ளன. தரமான தேயிலையை உற்பத்தி செய்வதற்காக தொழிற்சாலை உரிமையாளர்களும் தோட்ட உரிமையாளர்களும் பெரும் முயற்சி எடுக்க வேண்டும். அவர்களுக்கு உதவுவதற்காக அரசு எப்போதும் தயாராக நிற்கின்றது. சிறந்த தரமான தேயிலை ஏற்றுமதி மூலம் அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்வதுடன் நாட்டுக்கும் நற்பெயரை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.