தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த வண.பிதா.எம்.எஸ்.கருணாரட்ணம் அடிகளாரின் படுகொலைச் சம்பவம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி மல்லாவி மாங்குளம் வீதியில் கிளைமோர் குண்டுத் தாக்குதலில் றோமன் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவரும், வடக்கு கிழக்கு மாகாண மனித உரிமைச் செயலகத்தின் இயக்குநருமாகிய வண.பிதா, எம்.எஸ்.கருணாரட்ணம் அடிகளார் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்.
இப்படுகொலையை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. வண.பிதா.எம்.எஸ்.கருணாரட்ணம் தேவாலயம் சென்று வருவதற்கு இவ் வீதியையே உபயோகிப்பது வழமை. குறிப்பிட்ட தினத்தில் ஞாயிறு விசேட பூசை ஆராதனையின் பின் திரும்பி வந்து கொண்டிருக்கும் வேளையில் இக்கோரக் கொலை இடம்பெற்று இருக்கின்றது.
வண.பிதா.எம்.எஸ்.கருணாரட்ணம் மனித உரிமைகள் சம்பந்தமான பணிகளில் தீவிரமாக பங்கு பற்றிய ஒருவர். வன்னிப் பிரதேசத்தில் வாழ்கின்ற தமிழ்க் குடிமக்கள் மீது தொடர்ச்சியாக இழைக்கப்படுகின்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களை உடனுக்குடன் வெளிக்கொணர்வதில் பாரிய பங்களிப்பை ஆற்றி வந்தவர்.
இவ்விதமான செயற்பாடுகளின் மூலம், வண.பிதா. எம்.எஸ்.கருணாரட்ணம் அடிகளார் வன்னியில் வாழ்ந்து வந்த தமிழ் குடிமக்களின் மீது மிக மோசமான மனித உரிமை மீறல்களைச் செய்தவர்களின் ஆத்திரத்திற்கு இலக்காகியிருந்திருப்பார்.
அரசாங்கத்தினுடைய ஆழ ஊடுருவும் படைகள் இதற்கு முன்பும் வன்னிப் பிரதேசத்தில் பல தடவைகளில் நடத்திய கிளைமோர் தாக்குதல்களின் மூலம் தமிழ்க் குடிமக்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாக அவர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.வண.பிதா.எம்.எஸ்.கருணாரட்ணம் அவர்களின் படுகொலை இவ்விதமான அடையாளமுள்ள ஒரு கொலையாகத் தென்படுகின்றது.
போரில் ஈடுபடாத மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடுகின்ற குடிமக்கள் மீது இவ்விதமான மிலேச்சத்தனமான தாக்குதல்கள் கடும் கண்டனத்துக்கு உள்ளாக்கப்படுவதோடு, தற்பொழுது முழுமையாக நிலவி வருகின்ற வேறுபட்ட கருத்துக்களுக்கு செவிமடுக்காத தன்மையையும், தண்டனைக்குப் பயமில்லாத நிலைமையையும் எடுத்துக் காட்டுகின்றது. தொடர்ந்து நடைபெறும் மனித உரிமை மீறல்களை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கத்திற்கு மன உறுதியில்லை என்பதையே,இவ்விதமான நிகழ்வு எடுத்துக் காட்டுகின்றது.
வன்னியில் வாழ்ந்து வந்த தமிழ் குடிமக்களின் நியாயமான உரிமைகளுக்காக, அயராது உழைத்து வந்த வண.பிதா.எம்.எஸ்.கருணாரட்ணம் அவர்களின் மறைவையொட்டி நாம் எமது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.