ரொஷான் நாகலிங்கம்
இடதுசாரி முன்னணியின் தொழிற்சங்கமான ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம் மே தினத்தை இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மற்றும் இலங்கை வர்த்தக ஊழியர் சங்கத்துடன் இணைந்து கொண்டாடவுள்ளது.
யுத்தம் மற்றும் உலக மயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இம்மூன்று சங்கங்களும் இணைந்து பிற்பகல் ஒரு மணிக்கு கொள்ளுப்பிட்டியிலிருந்து ஹைட் பாக் மைதானம் வரை ஊர்வலத்தை நடத்தவுள்ளதுடன் இதன் பின் பொதுக்கூட்டமும் இடம்பெறவுள்ளது.
இதில் ஐக்கிய தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் பாலாதம்பு இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ஷா மற்றும் லீனஸ் குணதிலக ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
ஐக்கிய சோஷலிச முன்னணி தனது மே தின ஊர்வலத்தை சாலிகா மைதானத்திலிருந்து ஆரம்பித்து கிருலப்பனை சந்தியில் பொதுக்கூட்டத்தை நடத்தவுள்ளது.
நண்பகல் 12க்கு மே தின ஊர்வலம் ஆரம்பமாகி கிருலப்பனை சந்தியை சென்றடைந்ததும் பிற்பகல் 3.30 மணிக்கு பொதுக்கூட்டம் ஆரம்பமாகவுள்ளதாக ஐக்கிய சோஷலிச முன்னணியில் அங்கம் வகிக்கும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பேச்சாளர் தெரிவித்தார்.
அத்துடன், இதில் அமைச்சர்களான டியூ.குணசேகர, திஸ்ஸ விதாரண, கொழும்பு மாநகர சபையின் எதிர்க் கட்சித் தலைவர் வாசுதேவ நாணயக்கார உட்பட தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உரையாற்றவுள்ளதாகவும் தெரிவித்ததுடன் இந்த நிகழ்வுகளுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
13 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பு தனது மே தினத்தை நாவலப்பிட்டி நகர மண்டபத்தில் நடத்தவுள்ளது.
இத்தினத்தையொட்டிய நிகழ்வுகள் காலை 10 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளதுடன் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அக்கூட்டமைப்பின் தலைவர் எஸ்.இராமநாதன் தெரிவித்துள்ளார்.