மனைவியை பிரிந்து வாழும் ஒரு பிள்ளையின் தந்தையான 43 வயது குடும்பஸ்தர் காணாமல் போயுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்திலும், வாழ்க்கைத் தொழில்,தொழிநுட்ப பயிற்சி பிரதி அமைச்சருமான பெ.இராதாகிருஷ்ணனிடமும் குடும்பத்தினர் புகார் செய்துள்ளனர்.
மாதம்பிட்டி ஹேனமுல்ல கேம்ப் பகுதியைச் சேர்ந்த மொகமட் சனூன் முனீர் என்பவரே காணாமல் போயுள்ளதாக சகோதரியான மின்னத்தூல் பௌசியா புகார் செய்துள்ளார்.
பரம்பரையாக கொழும்பிலேயே வசித்து வருகின்றோம். எனது சகோதரரான முனீர் திருமணம் முடித்து மனைவியை பிரிந்து வாழ்கிறார். அவருக்கு ஒரு குழந்தையுள்ளது. அவரது மனைவி மறுமணம் செய்து சென்றதன் பிறகு மனோநிலை பாதிக்கப்பட்டவராக காணப்பட்ட எனது சகோதரரை நானே பராமரித்து எனது குடும்பத்துடன் வைத்திருந்தேன்.
கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி வீட்டை விட்டு சென்றவர் இன்று வரை வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக கிராண்பாஸ் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தும் இன்று வரை எதுவித பலனும் கிடைக்கவில்லை.
எனது சகோதரரைச் சகல பொலிஸ் நிலையங்களிலும் அங்கொடை ஆஸ்பத்திரியிலும் சகல சிறைச்சாலைகளிலும் தேடிப்பார்த்தும் எது விதமான பலனும் பிரயோஜனமும் இல்லை. அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்வதற்கு எதுவிதமான தீய தொடர்புகளும் இல்லை. எனது சகோதரர் கடத்தப்பட்டரா? அல்லது கைது செய்யப்பட்டரா? என்று தெரியவில்லை.
நிரபராதியான எனது சகோதரரை கண்டுபிடித்துத் தாருங்கள் என்று அவரது சகோதரி கேட்டுக் கொண்டார். முனீர் தொடர்பாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸ் அத்தியட்சர் நந்தன முனசிங்கவுக்கு பிரதி அமைச்சர் அறிவித்துள்ளார்.