*பத்மினி சிதம்பரநாதன் எம்.பி.குற்றச்சாட்டு
அரசின் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் சர்வதேசத்திற்கு தெரிய வருவதைத் தடுக்கும் சதியாகவே வடக்கு,கிழக்கு மனித உரிமைகள் செயலக பணிப்பாளர் கருணாரட்ணம் அடிகளார் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
வடக்கு,கிழக்கு மனித உரிமைகள் செயலகப் பணிப்பாளர் அருட்திரு எம்.எக்ஸ்.கருணாரட்ணம் அடிகளார் மாங்குளம்-மல்லாவி வீதியில் வைத்து நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டுள்ளதை நாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
ஞாயிற்றுக்கிழமை தேவாலயப் பூசையை முடித்துக் கொண்டு வீதியில் வந்துகொண்டிருந்த போதே இவ்வாறான மோசமான படுகொலைக்குட்பட்டார். மனித உரிமையாளரான அடிகளார் தமிழ் மக்கள் மீது அரசு மேற்கொண்டு வந்த மனித உரிமை மீறல்களை உடனுக்குடன் உலகிற்கு தெரியப்படுத்தி வந்தவர்.இதனூடாக தமிழ் மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு உலகம் அனுசரணையாக இருக்க வேண்டும்மென எதிர்பார்த்தார். இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் தொடர்புகளை வலுப்படுத்தி ஒற்றுமைக்காக உழைத்தவரையே இனவாதிகள் கேவலமான முறையில் படுகொலை செய்துள்ளனர்.
வடக்கு, கிழக்கு மனித உரிமைகள் செயலகம் 2004 ஆடி மாதம் உருவாக்கப்பட்டது. வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நல்லாட்சி உருவாக்கத்தின் ஒரு முயற்சியாகவே இதுவும் அமையப் பெற்றது.
ஊடகவியலாளர்கள், மனித உரிமையாளர்கள், இராஜதந்திரிகள் போன்றவர்களை தமிழ்ப் பகுதிகளுக்குச் சென்று உண்மை நிலையைக் கண்டறியவிடாமல் அரசு தடுத்து வரும் இவ்வேளையில், வடக்கு, கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தினதும், அதன் பணிப்பாளரான அருட்திரு கருணாரட்ணம் அடிகளாரதும் உண்மையை வெளிக்கொணரும் பணி அத்தியாவசியமாக தேவைப்பட்ட ஒன்று.இதனைத் தடுக்கும் ஒரு சதி முயற்சியாகவே இவரது படுகொலையைப் பார்க்க முடியும். ஆனால்,தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் வலிமையானது. அதன் உண்மையை யாராலும் மறைக்க முடியாது.
தனது வாழ்நாளை பொதுத் தொண்டுக்காகவே அர்ப்பணித்த அடிகளாரின் ஆத்மா சாந்திபெற பிரார்த்திப்பதோடு, அவரை இழந்து துயருறும் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் எம் ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.