மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அழுத்தங்களுக்கு உட்பட்டிருக்கும் இலங்கை அரசாங்கம் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற உரிமைகள் தொடர்பாக உணர்வுபூர்வமாக செயற்படும் பாரம்பரிய பங்காளிகளின் ஆதரவைக் கைவிட்டு விட்டு தனது உள்சார் கட்டமைப்புத் திட்டங்களுக்கு தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக சீனா மற்றும் ஈரான் பக்கம் கவனத்தை செலுத்தியுள்ளது.
பத்திரிகையாளர்கள் மீதான இம்சைகள் உட்பட, அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அண்மைய காலப்பகுதியில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச மனித உரிமைக் குழுக்களுக்கும் அரசாங்கத்திற்குமிடையிலான உறவுகளில் இறுக்கமான நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
`எமக்கு உங்கள் பணம் தேவை இல்லை' என்று அண்மையில் உலக வங்கி அதிகாரிகளுக்கு திறைசேரியின் சிரேஷ்ட அதிகாரியால் கூறப்பட்டுள்ளதாக ஐ.பி.எஸ். செய்திகள் தெரிவிக்கின்றன.
வெளி உதவியில் அரசாங்கம் தங்கியிருக்கின்ற போதும் மானியங்கள் மற்றும் சலுகைக் கடன்களை உள்ளடக்கிய சர்வதேச உதவிகள் விருப்பமற்ற நிபந்தனையுடன்களுடனேயே கிடைப்பதால் அவற்றை ஏற்றுக்கொள்ள விருப்பமற்ற தன்மையே அரசிடம் காணப்படுவதாக வெளிவிவகார ஆய்வாளர்களும் பொருளியலாளர்களும் கூறுகின்றனர்.
கடந்தவருடம் சர்வதேச நாணய நிதியம் இலங்கையிலிருந்தும் தனது நிகழ்ச்சித் திட்டங்களை நிறுத்திவிட்டது. அதேசமயம் விவசாயிகள், ஊடகவியலாளர்கள் உட்பட சிவில் சமூகக் குழுக்களுடன் அண்மையில் கலந்தாலோசனைகளை வங்கி மேற்கொண்டிருந்தது.
மூன்றாண்டுகளுக்கு இலங்கையில் புதிய திட்டங்களை செயற்படுத்துவதற்கான உபாயத்தை வகுக்கும் நோக்கத்துடனேயே இந்நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. உலகவங்கி கூறுவதை அதிகாரிகள் செவிமடுப்பதில்லையாதலால் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்கு தங்களைப் பயன்படுத்துவதே இதற்கான உண்மையான காரணம் என்று சிவில் சமூகப் பணியாளர் ஒருவர் ஐ.பி.எஸ்.ஸுக்கு தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை, வெளிவிவகாரம் தொடர்பான கொள்கையில் தேர்ச்சியற்ற தன்மையே தென்படுவதாகவும் சாதாரணமாக உறவுகள், பொருளாதார, அரசியல் தன்மைகள் தொடர்பான மதிப்பீடுகளை வெளிவிவகார அமைச்சு கொண்டிருக்க வேண்டும். இது காணப்படவில்லை. வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்களுடன் கடுமையாக நடந்துகொள்ளாமல் அவற்றை இராஜதந்திர ரீதியாக கையாள வேண்டிய தேவை உள்ளது என்று ஓய்வுபெற்ற இராஜதந்திரியும் ஆய்வாளருமான நந்தா கொடகே தெரிவித்துள்ளார்.
உலக வங்கியையும் சர்வதேச நாணய நிதியத்தையும் பகைத்துக்கொள்ளாமலிருப்பது நல்லது என்று குறிப்பிட்ட கொடகே நாம் பகைவர்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
பல்வேறு விடயங்களில் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகமவும் அவரின் வெளிவிவகாரச் செயலாளர் பாலித ஹோகணவும் கடுமையாக விவாதித்து வருவது அறிந்ததொன்றாகும். அதேசமயம் ஜனாதிபதி ராஜபக்ஷவும் வெளிவிவகார கொள்கைகள் தொடர்பாக சுயாதீனமாக தீர்மானங்களை மேற்கொண்டு வருகிறார்.
வெளிவிவகாரக் கொள்கையில் மற்றொரு முக்கியமான விடயமாக இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அகமதி நிஜாத்தின் வருகை அமைந்துள்ளது.
ஏப்ரல் 28 இல் ஈரான் ஜனாதிபதி கொழும்புக்கு வருகைதரவுள்ளார். ஜனாதிபதி ராஜபக்ஷ கடந்த வருடம் ஈரானுக்கு சென்றபோது வாஷிங்டன் விசனத்தை வெளிப்படுத்தியிருந்தது.
இதேவேளை, ஈரானுடன் இலங்கை அதிகளவு பிணைப்புகளை ஏற்படுத்தி வருவதால் ஆயுத விற்பனை தொடர்பான கொழும்பின் கோரிக்கைக்கு இஸ்ரேல் சாதகமான பதில் அளிக்கும் சாத்தியம் இல்லையென ஆங்கிலப் பத்திரிகையொன்று குறிப்பிட்டிருந்தது. இலங்கைப் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா அண்மையில் இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டபோது இது தொடர்பான கவலை தெரிவிக்கப்பட்டதாகவும் அப்பத்திரிகை கூறியிருந்தது.
வடக்கில் மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன. அதேசமயம், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அரசின் மீது பரவலாக குற்றச்சாட்டுக்கள் அதிகரித்துள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் மறுத்தபோதும் அதிகரித்துவரும் ஆதாரங்களை குறிப்பாக கடத்தல்கள் தொடர்பாக சான்றுகளுடன் சர்ச்சையை ஏற்படுத்த முடியாத நிலைமை அரசுக்கு காணப்படுகிறது.
ஆட்சித்திறன், வெளிப்படைத்தன்மை, செலவீடுகளின் ஒழுங்குமுறை என்பனவற்றுடன் பிணைக்கப்பட்டதாக மேற்குலக உதவிகள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதனால், நெடுஞ்சாலைகள், புகையிரதப் பாதைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்ற பல உள்சார் கட்டமைப்பு திட்டங்களுக்காக நட்பு நாடுகளை கவர்ந்திழுக்கும் நிர்ப்பந்தம் ராஜபக்ஷவுக்கு ஏற்பட்டுள்ளது. வட்டியுடன் கடன்களை வழங்க சீனா, ஈரான் போன்ற நாடுகள் முன்வந்துள்ளன.
நிலக்கரி மின் உலை, துறைமுக நிர்மாணம் என்பனவற்றுக்காக சீனா 700 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியை வழங்கியுள்ளது. அத்துடன், இரு நெடுஞ்சாலைகளுக்காக 450 மில்லியன் டொலர்களை கடனாகப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
மறுபுறத்தில் ஈரான் 450 மில்லியன் டொலர்களை நீர்மின் திட்டத்திற்கு வழங்கியுள்ளதுடன் எண்ணெய் சுத்திகரிப்புக்காக 1 பில்லியன் டொலர்களையும் முதலீடு செய்துள்ளது. அத்துடன், இலங்கையின் மசகு எண்ணெய் தேவைக்காக ஏழு மாதங்களுக்கான கடன் வசதியையும் ஈரான் செய்து கொடுத்துள்ளது.
இதேவேளை, இலங்கை போன்ற நாடுகள் பெரியதும் செல்வாக்கு மிக்க நாடுகளுடன் நல்லுறவுகளை பேண வேண்டிய தேவை இருப்பதாகவும் சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதியை விலத்திவிடுவது உதவியளிக்கும் விடயமாக அமையாது என்று தேசிய சமாதானப் பேரவை பணிப்பாளர் ஜேகான் பெரேரா ஐ.பி.எஸ்ஸுக்கு பெரேரா கூறியுள்ளார்.
குறைந்த வட்டியுடனான கடன்கள், மானிய உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு மாறாக வர்த்தக ரீதியான கடன்களை அரசு பெற்றுவருவதாகவும் இது கடன்பளுவை மேலும் அதிகரிக்குமெனவும் இந்தக்கடன் சுமையை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் விட்டுச் செல்ல வேண்டிய நிலைமை இருப்பதாகவும் ஐ.தே.க. எம்.பி. ரவிகருணாநாயக்க கூறியுள்ளார்.