இலங்கை உட்பட தெற்காசிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை ஈரான் ஜனாதிபதி அகமதி நிஜாத் ஆரம்பிக்கவிருக்கும் தருணத்தில் அமெரிக்கா `நிபந்தனைகளை' முன்வைத்திருக்கிறது.
ஈரான் மற்றும் அந்நாட்டின் ஜனாதிபதி தொடர்பாக ஏனைய நாடுகள் எவ்வாறு செயற்பட வேண்டுமென்ற அமெரிக்காவின் கொள்கையை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ரொம் காசே நேற்று முன்தினம் வாஷிங்டனில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
இரு தரப்பு உறவுகளை ஒழுங்கமைத்துக் கொள்வது எவ்வாறு என்பதை தீர்மானிப்பது சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நாடுகளையும் பொறுத்த விடயமாகும். ஐரோப்பாவிலுள்ள எமது நேச அணிகள் உட்பட பல நாடுகள் ஈரானுடன் இராஜதந்திர உறவுகளை பேணி வருகின்றன. அந்த உறவுகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதை தீர்மானிப்பதும் அந்நாடுகளைப் பொறுத்த விடயமாகும்.
அதே சமயம், ஈரானின் யூரேனியத்தை செறிவூட்டும் நடவடிக்கைகளை இடைநிறுத்துவது தொடர்பாகவும் அந்நாட்டின் அணுவாயுத நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாகவும் ஐ.நா. பாதுகாப்பு சபையும் சர்வதேச சமூகமும் ஈரானுக்கும் அந்நாட்டு ஜனாதிபதிக்கும் முன்வைத்திருக்கும் நிபந்தனைகளை நிறைவேற்றுமாறும் இந்திய அரசாங்கமோ அல்லது வேறு எந்த அரசாங்கமோ அழைப்பு விடுக்குமென நாம் கருதுகிறோம்.
அத்துடன் ஈராக் தொடர்பாக பயனளிக்காத அதன் நடவடிக்கைகளை ஈரான் முடிவுக்கு கொண்டு வருமாறு தெஹ்ரானை கேட்டுக் கொள்ள வேண்டுமென அரசாங்கங்களை நாம் ஊக்குவிக்கின்றோம். அதேசமயம், ஹிஸ்புல்லா, ஹமாஸ் போன்ற அமைப்புகள் உட்பட பயங்கரவாதத்திற்கு துணை போகும் செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருமாறும் நாடுகள் ஈரானிடம் கேட்டுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்று ரொம் காசே கூறியுள்ளார்.
எதிர்வரும் 28 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி அகமதி நிஜாத் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் வருகைதரும் அவர், இரு நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார். அதேநேரம், புதுடில்லியில் இரு மணித்தியாலங்களே தங்கியிருந்து ஜனாதிபதி பிரதீபா பட்டேல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் சந்திப்புகளை மேற்கொள்வாரென இணையத்தள செய்திகள் தெரிவித்தன.