கிளிநொச்சி வன்னேரி ஆனைவிழுந்தான் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆழ ஊடுருவும் படையணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் பூநகரி ப.நோ.கூ. சங்க பணியாளர்களிருவர் படுகாயமடைந்துள்ளனர்.
முறிகண்டியிலிருந்து சுமார் 9 கிலோ மீற்றர் தூரத்தில் முறிகண்டி முழங்காவில் வீதியிலேயே நேற்று அதிகாலை ஒரு மணியளவில் இந்தக் கிளைமோர் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
ப.நோ.கூ. சங்கத்திற்குரிய சுமார் பத்து லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் இந்த லொறி சென்று கொண்டிருந்தபோது அதன் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் லொறிச் சாரதியான குழந்தைவேலு எழில்மேகவர்ணன் (பூநகரி) மற்றும் லொறிக் கிளீனரான கந்தையா தர்மஜெயந்தன் (34 வயது- பூநகரி) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதலில் லொறியும் அதற்குள்ளிருந்த பல பொருட்களும் பலத்த சேதமடைந்துள்ளன.