*வெறுங்கையுடன் திரும்பும் சில்லறை வர்த்தகர்கள்
எம்.ஏ.எம். நிலாம்
கொழும்பு புறக்கோட்டை அரிசி வர்த்தகமையத்தில் எந்தவொரு மொத்த விற்பனை நிலையங்களிலும் அரிசி விற்பனைக்கு இருக்கவில்லை. வெளியூர்களிலிருந்து வந்த சில்லறை வர்த்தகர்கள் வெறுங்கையுடன் திரும்பும் நிலையே காணப்பட்டது.
வெளி மாவட்டங்களிலிருந்து நேற்று அரிசி லொறிகள் எதுவுமே வரவில்லை. மொத்த வியாபாரிகள் தமது கடைகளை திறந்து வைத்திருந்த போதிலும் அங்கு அரிசி காணப்படவில்லை. எந்தவொரு கடையிலும் ஒரு கிலோ அரிசியைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலையே காணப்பட்டது.
இந்த நிலைமை காரணமாக கொழும்பிலுள்ள ஹோட்டல்கள், உணவகங்களின் உரிமையாளர்கள் சாப்பாட்டுக்காக அரிசியை தேடி அலையும் நிலை தோன்றியுள்ளது. இன்று நெல் ஆலைகளிலிருந்து மொத்த வியாபாரிகளுக்கு அரிசி வரவில்லையென்றால் சாப்பாட்டுக் கடைகள், ஹோட்டல்களில் "சோறு" இல்லை என்ற வாசக அட்டைகளை தொங்கவிட வேண்டிய நிலை ஏற்படுமென்று உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரதான நெல் ஆலைகள் இருக்கும் அநுராதபுரம், பொலநறுவை, கெக்கிராவை போன்ற இடங்களிலிருந்து நேற்றைய தினம் ஒரு லொறி கூட கொழும்புக்கு வரவில்லை.
நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படும் வரை நெல் குற்றும் பணி இடை நிறுத்தப்பட்டிருப்பதாக ஆலை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். நெல்லின் உத்தரவாத விலையை தீர்மானிக்கும் பொறுப்பை நெல் ஆலை உரிமையாளர்களிடமும் மொத்த வியாபாரிகளிடமும் அரசாங்கம் விட்டதன் காரணமாக உத்தரவாத விலையைத் தீர்மானிப்பதில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.
தமிழ், சிங்கள புதுவருடத்துக்குப் பின்னர் நெல் ஆலைகளிலிருந்து அரிசியை ஏற்றிக் கொண்டு ஒரு லொறி கூட கொழும்புக்கு வரவில்லை. ஏற்கனவே இருந்த கையிருப்பு கடந்த திங்கட்கிழமையுடன் முடிவடைந்துவிட்டதாகவும் இனிமேல் நெல் ஆலைகளிலிருந்து அரிசி வந்தால் மட்டுமே சில்லறை வர்த்தகர்களுக்கு அரிசியை வழங்க முடியுமென மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.
இன்று நெல் ஆலைகளிலிருந்து கொழும்புக்கு அரிசி லொறிகள் வராவிட்டால் மொத்த விற்பனை நிலையங்களை மூட வேண்டி ஏற்படலாமென மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் செய்தியாளர் மாநாட்டை நடத்திய பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, நாட்டில் அரிசிக்கு பெருந்தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன மக்களை ஏமாற்றுவதற்காக அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை என்று கூறுகிறார் என்று தெரிவித்தார்.
இந்நிலை இன்னும் ஒரு சில வாரங்களுக்குத் தொடருமானால் நாடு பட்டினிச் சாவை எதிர்நோக்கும் அபாயம் காணப்படுவதாகவும் உணவுப் பார்சல்களை தட்டிப் பறிக்கும் நிலை ஏற்படலாமெனவும் ரவிகருணாநாயக்க தெரிவித்தார்.