*நம்பிக்கையில்லை; வெளியேறிய சர்வதேச சுயாதீன நிபுணர்கள் தெரிவிப்பு
யோ.நிமல்ராஜ்
பாரதூரமான 16 மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளை அவதானித்து வழிகாட்டல்களை மேற்கொள்வதற்காக வருகை தந்து தமது பணியை இடைநிறுத்தி வெளியேறியிருக்கும் சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழு,ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் வெளிப்படையான தீர்வொன்றை முன்வைக்க முடியுமென்ற நம்பிக்கை தமக்கில்லையென அதிருப்தியும் கவலையும் தெரிவித்துள்ளது.
அத்துடன் தமது வெளியேற்றத்திற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை தொடர்பான விசாரணைகள் மிகவும் தாமதமாக முன்னெடுக்கப்படுவதும் காரணமென நிபுணர் குழு சாடியுள்ளது.
சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழுவின் வெளியேற்றம் தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவ்வமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது.
இலங்கையின் பாரதூரமான மனித உரிமை மீறல்களின் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளை கண்காணிப்பதற்கும் சுயாதீனமான விசாரணைகள் நடைபெறுவதற்காகவும் சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்குழு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் கடந்த 2007 பெப்ரவரியில் நியமிக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதியின் இவ்வேண்டுகோளினைத் தொடர்ந்து அன்று தொடக்கம் பதின்மூன்று மாதங்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளைக் கண்காணிக்கும் பணியில் இச் சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழு ஈடுபட்டு வந்தது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான 16 வழக்குகளை கண்காணித்து வந்த சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர் குழு கடந்த மாதம் முதல் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளை அவதானிக்கும் பணிகளை நிறுத்திக் கொண்டது.
அவ்விடயம் தொடர்பாக அக் குழுவினரால் விடுக்கப்பட்டிருந்த அறிக்கையில்; மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கான அரசியல் துணிவு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை.
அத்துடன் இலங்கையில் மீறப்படும் மனித உரிமை மீறல்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகள் வெளிப்படைத் தன்மையற்றவை.
இவ் ஜனாதிபதி ஆணைக்குழுவினரால் நடத்தப்படும் விசாரணைகள் சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டனவாக அமைந்திருக்கவும் இல்லை.
இலங்கையில் இனந்தெரியாதவர்கள் என்ற பெயரில் நடத்தப்பட்டுள்ள மனிதப் படுகொலைகள், ஆட்கடத்தல், மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளமை என்பன எந்த ரீதியிலும் நியாயப்படுத்தக் கூடிய விடயமல்ல எனவும் சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழு தனது இறுதி அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பான ஊடகவியலாளர் மாநாடொன்று நேற்று செவ்வாய்க்கிழமை சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழுத் தலைவரும் இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியரசர் பி.நற்வர்லால் பகவதி தலைமையில் கொழும்பு ஹில்டனில் நடைபெற்றது.
இச் சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழுவில் இந்தியா, பிரான்ஸ், இந்தோனேஷியா, அமெரிக்கா, நெதர்லாந்து,பங்களாதேஷ், கனடா, சைப்பிரஸ்,பிரிட்டன்,அவுஸ்திரேலியா, மற்றும் யப்பான் ஆகிய நாடுகளின் சட்டவியல் நிபுணர்கள் அங்கம் வகித்திருந்தனர்.
செய்தியாளர் மாநாட்டில் தலைவர் பி.என். பகவதியுடன் ஜப்பானைச் சேர்ந்த பேராசிரியர் யோசோ யொக்காடோ மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த பேராசிரியர் நிகேல் றொட்லே ஆகியோரும் கருத்துகள் தெரிவித்திருந்தனர்.
சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழுவின் தலைவர் பி.என்.பகவதி கருத்துத் தெரிவிக்கையில்;
ஜனாதிபதியின் வேண்டுகோளைத் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளை ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை செய்யும் போது அவதானிக்கும் பணியில் எமது குழு செயற்பட்டு வந்தது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஒவ்வொரு விசாரணையின்போதும் எமது குழுவின் நிபுணர்களோ அல்லது அவர்களின் உதவியாளர்களோ அல்லது அவர்கள் இருவருமோ பிரசன்னமாகி இருப்பார்கள்.
எமது இவ்வுறுப்பினர்களின் அவதானிப்பின் கீழ்த்தான் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனால், ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் சர்வதேச சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டவையாகவோ வெளிப்படையானவையாகவோ இருக்கவில்லை.
அத்துடன் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழுவினரால் விதிக்கப்பட்ட ஒழுங்கு முறைகளுக்கு உட்பட்டவையாகவும் இருக்கவில்லை.
சர்வதேச சுயாதீன நிபுணர்கள் குழுவின் சட்ட முறைகள் இலங்கையின் சட்ட முறைகளுக்கு முற்றிலும் முரணானதென்ற கருத்து இலங்கையில் உள்ள அரசியல் பிரமுகர்கள் சிலரால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
அதில் எந்தவிதமான நியாயமும் இல்லை. ஏனெனில், இலங்கையின் சட்டமுறைகளும் இந்தியாவின் சட்ட முறைகளும் கிட்டத்தட்ட ஒருமித்த தன்மையுடையனவாகவே காணப்படுகின்றன.
அத்துடன், அச் சட்டமுறைகள் சர்வதேச சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பட்டதாகவே இருக்கின்றன.
ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வெளிப்படையான தீர்வொன்றினை முன்வைக்க முடியுமென்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை.
அத்துடன் தற்பொழுது ஜனாதிபதி ஆணைக்குழுவினரால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் விசாரணைகள் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்காக மட்டுமே நடத்தப்படுகின்றதே ஒழிய எமக்காக அல்ல.
இந்நிலையில் தற்போது நடைபெறும் விசாரணைகளுக்கும் எமக்கும் எதுவிதமான தொடர்புகளும் இல்லை.
அத்துடன் இந்த விசாரணைகள் இலங்கையின் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பாக உரிய தீர்வொன்றினை பெற்றுக் கொடுக்குமென்பதிலும் எமக்கு நம்பிக்கை இல்லை.
மேலும் சர்வதேச அளவில் மனித உரிமை மீறல்களும் வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
ஆனால்,இலங்கையில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை ஏனைய நாட்டின் மனித உரிமை மீறல்களுடன் ஒப்பிட முடியாதெனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவித்த இக்குழுவின் அங்கத்தவரான யப்பானைச் சேர்ந்த பேராசிரியர் யோசோ யொக்காடோ; சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழு ஐரோப்பிய ஒன்றியத்தைச் சார்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டு இலங்கையில் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளது.
அது முற்றிலும் ஏற்க முடியாதவொரு கருத்தாகும். ஏனெனில், இக் குழுவில் இந்தியா, பங்களாதேஷ், சைப்பிரஸ், அமெரிக்கா,அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் நிபுணர்களும் அங்கம் வகிக்கின்றனர்.
இவ்வாறானதொரு நிலையில், இக்குழு ஐரோப்பாவைச் சார்ந்ததென்ற குற்றச்சாட்டை ஒரு போதும் ஏற்க முடியாது.
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான 16 வழக்குகளை அவதானிப்பதற்காக எமது குழு நியமிக்கப்பட்டிருந்தது.
அதன்படி எமது குழுவின் அங்கத்தவர்கள் தவறாது ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் இம் மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகள் ஜனாதிபதி ஆணைக்குழுவினரால், மெத்தனப் போக்கினால், மேற்கொள்ளப்படுவதே எமது வெளியேற்றத்துக்குக் காரணம்.
இவ்வாறான நிலையில் எமது கண்காணிப்பு அங்கு தேவையற்றதொன்றாகவே காணப்படுகின்றது.
மேலும் நிதிப்பற்றாக்குறை காரணமாகத்தான் எமது குழு கண்காணிப்புப் பணிகளில் இருந்து விலகிக் கொள்வதாகவும் கருத்துகள் நிலவுகின்றன.
அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதொரு கருத்தாகும்.ஏனெனில், எமது குழுவின் விசாரணைகளுக்கு பெருந்தொகையான பணத்தினை நாம் செலவிட்டுள்ளோம்.
இவ்வாறான நிலையில் எம்மால் தொடர்ந்தும் கண்காணிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் ஒரு வருடத்திற்கோ அல்லது அதற்கு கூடிய காலப்பகுதிக்கோ உரித்தான செலவினைப் பொறுப்பேற்க சர்வதேச அமைப்புகள் தயாராகவே இருக்கின்றன.
எமது கண்காணிப்புப் பணிகளை தொடர்ந்தும் நாம் முன்னெடுக்கப் போவதில்லை.
சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழு ஐரோப்பிய ஒன்றியத்தைச் சார்ந்ததொன்றல்ல. அது ஒரு சர்வதேச ரீதியான அமைப்பாகுமெனத் தெரிவித்தார்.