* எச்சரிக்கிறது நீதி, சுதந்திரத் தேர்தலுக்கான மக்கள் இயக்கம்
எம்.ஏ.எம்.நிலாம்
கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பொலிஸ் காவலரண்களிலும் பிள்ளையான் குழுவின் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் ஆயுதபாணிகளாக நடமாடுவதாகவும் சுட்டிக்காட்டியிருக்கும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம், கிழக்கு மாகாண சபைத் தேர்தல் வன்முறைகளுடன் கூடிய ஒரு தேர்தலாகவே நடப்பதற்கான அறிகுறிகள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் தேர்தல் கண்காணிப்புக் குழுவான நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் நேற்று செவ்வாய்க்கிழமை அதன் முதலாவது செய்தியாளர் மாநாட்டை தேசிய நூலகச் சேவைகள் சபை கேட்போர்கூடத்தில் நடத்தியது.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைப்பின் முக்கியஸ்தர்களான சட்டத்தரணி ஷிரால் லக்திலக்க, சட்டத்தரணியும் மனித உரிமை ஆர்வலருமான நிமல்கா பெர்னாண்டோ, ஊடகவியலாளர் கீர்த்தி தென்னக்கோன், அசங்க மஹகெதர கமகே, எச்.பி.புஞ்சிஹேவா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இங்கு விளக்கமளித்த சட்டத்தரணி ஷிரால் லக்திலக்க கூறியதாவது;
எமது அமைப்பு கடந்த வாரத்தில் நான்கு தினங்கள் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்து அந்த மக்களின் கருத்துக்களை கேட்டறிய நடவடிக்கை எடுத்தது. 20 அம்சங்களைக் கொண்ட கேள்விக்கொத்தை சமர்ப்பித்து அவர்கள் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எந்த மனநிலையைக் கொண்டிருக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ளமுற்பட்டோம்.
அவர்களில் 68 சதவீதமானோர் தேர்தல் சுதந்திரமாக நடக்குமா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றனர். இன்னொரு கேள்வி தொடர்பில் 48 சதவீதமானோர் நிலைமை மோசமடைந்து வருவதாகவும் மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை காணப்படுவதாகவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
புதுவருடப் பிறப்புக்குப் பின்னர் ஒருவார காலத்துக்குள் கிழக்கில் நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 7 பேர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். மொத்தமாக 21 சம்பவங்கள் இதுவரை இடம்பெற்றுள்ளன.
தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் தேர்தல் காலத்தில் நடத்தும் கண்காணிப்புப் பணிகளின் பின்னர் வாக்களிப்பு நாளன்று வன்முறைகள் இடம்பெறவில்லை எனக் காரணம் காட்டி தேர்தல் நேர்மையாகவும் நீதியாகவும் நடந்ததாக சாட்டுக்கு அறிக்கையை வெளியிட்டுத் தப்பிக் கொள்கின்றனர். நாம் அதனைச் செய்யவிரும்பவில்லை.
தேர்தலுக்கு முன்னரும் வாக்களிப்பு தினத்திலும் அதன் முன்னரும் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும் பதிவு செய்து மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் உண்மைகளை வெளிப்படுத்த முடிவு செய்துள்ளோம்.
1988 இல் தெற்கில் நடந்த மாகாண சபைத் தேர்தலிலும் அதன் பின்னர் வடமேல் மாகாணத்தில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலிலும் நடந்த சம்பவங்களை விடவும் மோசமான விளைவுகள் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நடக்குமோ என அச்சம் உருவாகியுள்ளது எனக் கூறினார்.
ஊடகவியலாளர் கீர்த்தி தென்னகோன் கருத்துத் தெரிவிக்கையில் கிழக்கில் அகதிகளாக்கப்பட்ட கடல்கோள் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த வாக்காளர்களின் நிலை குறித்து இன்னமும் எதுவும் தெரியவில்லை. அவர்களின் வாக்குகள் தவறாகப் பயன்படுத்தப்போவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அத்துடன், அரச வளங்கள் தேர்தல் பிரசாரத்துக்கு தாராளமாக பயன்படுத்தப்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது. இவை தொடர்பில் தேர்தல் ஆணையாளரின் கவனத்துக்குக் கொண்டுவரவிருக்கின்றோம்.
நிமல் கா பெர்னாண்டோ
மனித உரிமைகள் ஆர்வலரும் சட்டத்தரணியுமான நிமல்கா பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;
மட்டக்களப்பு உள்ளூராட்சி சபை தேர்தலின்போது நாம் அவதானித்த முக்கிய விடயங்களை வைத்து அறிக்கையொன்றைத் தயாரித்துள்ளோம். அதனடிப்படையில் எமது அடுத்த பணிகளை முன்னெடுக்கவிருக்கின்றோம். அந்தத் தேர்தல் நீதியாக நடந்ததாக கூற முடியாது. வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட மறுதினமே யாருக்கு வெற்றியென்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. அங்கு ஒருதலைப்பட்சமான செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டன.
முழுக்க ஆயுதங்களைக் காண்பித்தே தேர்தலை வெற்றி கொண்டனர். ஆயுதத் தாக்குதல் இடம்பெறாவிட்டாலும் அதனைக் காட்டி காரியத்தை சாதித்துக் கொண்டனர்.
கடந்த காலத்தில் தேர்தல் காலத்தில் இடம்பெறும் படுகொலைச் சம்பவங்களைக் கண்டவர்கள் தாராளமாக இருந்தபோதிலும் போதுமான சாட்சியங்கள் கிட்டாமை சட்டம் என்ன செய்கிறது என்ற கேள்வியை தோற்றுவித்துள்ளது.
சுயாதீனமான தேர்தல் ஆணைக்குழுவும் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவும் நியமிக்கப்படாத வரை நேர்மையான நீதியான சுதந்திரமான தேர்தல் நடக்கும் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.க.- முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகள் 5 மணிக்குப் பின்னர் பிரசாரங்களை முன்னெடுக்க முடியாதபடி தடைகள் போடப்பட்டுள்ளன. ஆளும்தரப்பினர் போதுமான பாதுகாப்புடன் அதனை தாராளமாக செய்துவருகின்றனர்.
இந்த அவலங்களை மக்களுக்கு எடுத்துக்கூறி நேர்மையான தேர்தலொன்றுக்கான மக்கள் எழுச்சியை தோற்றுவிப்பதில் எமது அமைப்பு முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது.
அசங்க மஹகெதரகமகேயும் புஞ்சிஹேவாவும் கருத்துக்களைத் தெரிவித்தனர்.