செப்டெம்பர் மாதம் பாகிஸ்தானில் ஐ.சி.சி.சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறுவதையொட்டி நியூசிலாந்து அணி அங்கு 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடத் திட்டமிட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அணி பாதுகாப்புக் காரணம் கருதி இம்முறை தொடரை ஒத்திவைத்ததால் அதனை ஈடுகட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பல்வேறு நாட்டு கிரிக்கெட் சபைகளைத் தொடர்புகொண்டு கிரிக்கெட் தொடர்களுக்காகப் பேசி வருகிறது.
கடைசியாக மேற்கிந்திய அணியை ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ள இயலுமா என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கேட்டிருந்தது. ஆனால், மேற்கிந்திய கிரிக்கெட் சபை அதனை நிராகரித்தது.
இந்நிலையில், நியூசிலாந்து அணி தற்போது பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இணங்கியுள்ளது. பயண விபரங்கள் இனிமேல்தான் முடிவுசெய்யப்பட வேண்டும்.
இதற்கிடையில் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்காக மேற்கிந்தியத் தீவுகள் அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அழைத்திருந்தது. ஆனால், வேறு போட்டிகள் இருப்பதால் பாகிஸ்தான் பயணம் மேற்கொள்வது சாத்தியமில்லை என்று மேற்கிந்தியத் தீவுகள் கூறியுள்ளது.
இத்தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரி ஷப்கத் நக்மி தெரிவித்தார்.
ஆகஸ்ட் மாதம் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் அழைத்திருந்தது. ஆனால், அந்தச் சமயத்தில் கனடாவுடன் ஏற்கனவே கிரிக்கெட் போட்டிகளை விளையாட ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் பயணம் சாத்தியமில்லை என்று மேற்கிந்தியக் கிரிக்கெட் சபை மறுப்புத் தெரிவித்துள்ளது.
செப்டெம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெறும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு முன் பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சி பெற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வருகை பயனுள்ளதாக அமையுமென்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தது.