ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 158 ஓட்டங்கள் குவித்த மெக்கலத்தின் சாதனையை முறியடிக்க முயற்சிப்பேனென்று அப்ரிடி கூறியுள்ளார்.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான கொல்கத்தா நைற் ரைடர்ஸ் அணி வீரர் மெக்கலம் 73 பந்துகளில் 158 ஓட்டங்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமலிருந்தார்.
அவர் 53 பந்துகளில் சதத்தை அடித்தார். இது 20 ஓவர் போட்டியில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்களாகும். இதன்மூலம், மெக்கலம் புதிய சாதனை படைத்தார்.
ஒரு நாள் போட்டியில் 37 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்துள்ள சயித் அப்ரிடி மெக்கலத்தின் 20 ஓவர் போட்டி சாதனையைத் தகர்க்க முயற்சிப்பேன் என்று சூளுரைத்துள்ளார். ஐதராபாத் அணிக்காக ஆடவுள்ள அப்ரிடி அளித்த பேட்டியில் கூறியதாவது;
நான் பெரிய ஷொட்களை அடித்து ஆடி வேகமாக ஓட்டங்கள் குவிப்பவன் என்ற பெயருக்குரியவன். 20 ஓவர் போட்டியை அதிகம் விரும்புபவன். ஐ.பி.எல். போட்டியில் எனது ரசிகர்களை ஏமாற்றாத விதத்தில் ஆட விரும்புகிறேன். மெக்கலத்தின் சாதனையை முறியடிப்பது என்பது கடினமான காரியம் தான். ஆனால், அது முடியாத காரியமில்லை.
தொடக்க வீரராகவோ அல்லது ஆரம்ப கட்டத்தில் விளையாட வாய்ப்புக் கிடைத்தாலோ அவரது சாதனையைத் தகர்க்க முயற்சிப்பேன். சிறந்த பந்து வீச்சை அடித்து நொறுக்க வேண்டுமென்பது தான் எனது நோக்கமாகும்.
ஒரு நாள் போட்டியில் அதி விரைவில் சதம் அடித்து சாதனை படைத்ததில் மிகுந்த பெருமையடைகிறேன். ஐ.பி.எல். போட்டி சிறப்பானதாகும். இதில் எனது ஆட்டத்தில் முத்திரை பதிக்க வேண்டுமென்பதில் ஆர்வமாக உள்ளேனென்றார்.