உலக கிரிக்கெட் அட்டவணையில் ஐ.பி.எல். போட்டியை சேர்க்க வேண்டுமென்று இந்திய கிரிக்கெட் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் சபை சார்பில், முதல் முறையாக ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போட்டிக்கான அணிகளில் வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
ஆனால், இதே நேரத்தில் சர்வதேச போட்டிகள் நடப்பதால் பல வெளிநாட்டு வீரர்கள் இந்தப் போட்டியில் ஆட முடியாத நிலை யேற்பட்டுள்ளது. குறிப்பாக இங்கிலாந்து வீரர்கள் எவரும் இந்தப் போட்டியில் ஆடவில்லை.
இந்தப் போட்டிக்கு ஐ.சி.சி. அங்கீகாரம் அளித்தாலும் இதனை உலக கிரிக்கெட் அட்டவணையில் சேர்க்கவில்லை. இது குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) தலைமை நிர்வாகி மால்கம் ஸ்பீட் கூறுகையில், `உலக கிரிக்கெட் அட்டவணையில் ஐ.பி.எல். போட்டியை சேர்க்க வேண்டிய அவசியம் இன்னும் வரவில்லை' என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் சபைச் செயலாளர் நிரஞ்சன் ஷா அளித்த ஒரு பேட்டியில்,
`ஐ.சி.சி. இன் ஆண்டுப் போட்டி அட்டவணையில் இந்திய பிரிமியர் லீக்கை (ஐ.பி.எல்) சேர்க்க வேண்டுமென்று விரைவில் கடிதம் எழுதவுள்ளளோம். இதன் மூலம் வெளிநாட்டு வீரர்கள் இந்தப் போட்டியில் விளையாட வசதியாக இருக்கும்' என்றார். எல்லா வருடமும் வீரர்களை ஏலம் விடாமல், குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வீரர்களை ஒப்பந்தம் செய்யலாமென்றும் அவர் கூறினார்.