சொந்த மண்ணில் விளையாடிய ஷேன் வோர்ன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதிரடியாக விளையாடிய வாட்சன் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றார். தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் தோல்வியடைந்த யுவராஜ் அணி பரிதாபமாகவுள்ளது.
ஐ.பி.எல்.`ருவென்ரி-20' தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் நடக்கிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடந்த லீக் போட்டியில் யுவராஜ் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மற்றும் வோர்னை கப்டனாக கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதின. நாணயச் சழற்சிகளில் வென்ற யுவராஜ் முதலில் துடுப்பாட்டத்தை எடுக்க தொடக்க வீரர்களாக கோயல், ஹோப்ஸ் களமிறங்கினர். கோயல் 26 ஓட்டங்கள் எடுத்தார்.
அடுத்து வந்த குமார் சங்ககார அதிரடியாக விளையாடினார். 8 பந்தில் 20 ஓட்டங்கள் எடுத்த இவர் வோர்ன் பந்தில் அவரிடமே பிடிகொடுத்து வெளியேறினார். இவரைத் தொடர்ந்து ஹோப்ஸ் (16), மஹேல ஜெயவர்தனா (2) வரிசையாக நடையைக்கட்டினர்.
அடுத்த வந்த யுவராஜ், யூசுப் பதான் வீசிய 16 ஆவது ஓவரில் முதல் பந்தை சிக்சருக்கு விரட்டினார். அடுத்த பந்தில் மீண்டும் ஒரு `மெகா' சிக்சர் அடித்து அரைசதம் அடித்தார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாட முயன்ற யுவராஜ், வோர்ன் பந்தில் `எல்.பி.டபிள்யு, ஆனார். இவர் 3 சிக்சர், 6 பவுண்டரி உட்பட 34 பந்தில் 57 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து வந்தவர் விரைவில் வெளியேற, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு தொடக்கம் மோசமாக அமைந்தது. கைவ் (5), அக்மல் (15) விரைவில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். அடுத்து வந்த யூசுப் பதானும் (7) வந்த வேகத்தில் வெளியேறினர். லீமேன் 17 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இர்பான் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும், மறுமுனையில் வாட்சன் அதிரடியை தொடர்ந்தார். 35 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். இவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்த ரவீந்திர ஜடேஜா, சாவ்லா வீசிய 15 வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 14 ஓட்டங்கள் எடுத்தார். வாட்சன் (5 சிக்சர், 5 பவுண்டரி) 76, ஜடேஜா 36 (ஒரு சிக்சர், 5 பவுண்டரி) ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலிருந்தனர். ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 18.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.