Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, April 24, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
பேரம் பேசப்பயன்படும் மூன்றாவது அணி
[24 - April - 2008] [Font Size - A - A - A]
நீரஜா சௌத்ரி

கோயமுத்தூரில் அண்மையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் அக் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஜ் காரத் மூன்றாவது மாற்று அணியை உடனடியாக அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று அறிவித்திருப்பதை அடுத்து மீண்டும் அவ் விஷயம் முன்னுக்கு வந்துள்ளது.

காரத் இவ்வாறு கூறுவது புதிதல்ல. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் காங்கிரஸுடனான இடதுசாரிகளின் உறவில் ஏற்படக்கூடிய உரசலைப் பொறுத்து மூன்றாவது அணிக்கான அவசரம் அதிகரித்தோ, குறைந்தோ வந்திருக்கிறது. கடந்த அக்டோபரில் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு விஷயத்தில் காங்கிரஸ் சமரச நிலையை மேற்கொண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-இடது சாரிக் கட்சிகள் ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த போது "உடனடியாக மூன்றாவது அணியை அமைக்கும் திட்டம் ஏதும் இல்லை" என்று கூறினார் காரத்.

முலாயம் சிங் யாதவின் சமாஜவாதி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பாரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு ஓம் பிரகாஷ் சௌதாலாவின் இந்திய தேசிய லோகதளம், பிருந்தாவன் கோஸ்வாமியின் அசாம் கண பரிஷத் ஆகிய கட்சிகள் அங்கம் வகித்த ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியை ஏற்படுத்துவதை முன்னர் ஆதரித்தனர் இடதுசாரிகள். தொடக்கத்தில் அதில் ஆர்வம் காட்டிய ஜெயலலிதா, பின்னர் அதிலிருந்து விலகிக் கொண்டார். சோனியா காந்திக்குப் பதிலடி கொடுக்கக் கூடியவர் ஜெயலலிதா மட்டுமே என்று ஐ.தே.மு.கூட்டணித் தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்தபோதிலும் கூட்டணியின் தலைவராக அவர் நியமிக்கப்படவில்லை. இப்போதைக்கு அவர் எந்த அணியிலும் இல்லை.

ஐ.தே.மு.கூட்டணியில் அங்கம் வகித்த பாபுலால் மராண்டியை தம் பக்கம் இழுக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஒரு வேளை அவர் பாஜக அணியில் சேர்ந்து ஜார்க்கண்டின் முதல்வர் பதவி வேட்பாளராக அவர் முன்னிறுத்தப்பட்டால் அந்த மாநிலத்திலும் பாஜக வெற்றி பெறக்கூடும்.

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி சேர முலாயம் சிங் யாதவ் முடிவு செய்தாரென்றால் அதோடு மூன்றாவது அணி என்னும் திட்டமே ஆட்டங்கண்டு விடும். கடந்த சில வார அரசியல் நடவடிக்கைகளில் முக்கியமானது காங்கிரஸ்-சமாஜவாதி கட்சி உறவில் ஏற்பட்டுவரும் மாற்றமாகும்.

இயல்பாகவே மூன்றாவது அணியின் மையப் புள்ளியாக விளங்கக் கூடியவர்கள் இடது சாரிகள். அதே போல்தான் முலாயம் சிங் யாதவும் காங்கிரஸும் முலாயம் சிங்கும் நெருங்கி வருவதற்கான சில சமிக்ஞைகள் சில நாள்களுக்கு முன் வெளியிட்டார் காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங், கோயமுத்தூர் மாநாட்டுக்கு முன் சமாஜவாதி கட்சிக்கும் இடது சாரிகளுக்கும் இடையே ஒரு பிளவை ஏற்படுத்துவதே அதன் நோக்கம். அதை உணர்ந்து கொண்ட முலாயம் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸுடனோ பாஜகவுடனோ தாம் கைகோர்க்கப் போவதில்லை என்று உடனடியாக அறிவித்தார். அதனாலேயே இரு கட்சிகளும் நெருங்கி வரவில்லை என்று கூறிவிட முடியாது ஆக இப்போது முலாயம்தான் கத்தி மீது நடப்பதைப் போல கவனமாகச் செயல்பட்டாக வேண்டியதாகிவிட்டது.

இரு கட்சிகளுமே உடனடியாக எந்த உடன்பாட்டுக்கும் வரப் போவதில்லை என்ற போதிலும் இரண்டும் பரஸ்பரம் ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளும் வேகம் குறைந்திருக்கிறது. முலாயம் ஆட்சிக் காலத்தில் நடந்த பல முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தொடர்ந்து கோரிவருகிறார் மாயாவதி. முதலில் அது பற்றி மௌனமாக இருந்த மத்திய அரசு இப்போது அக் கோரிக்கையை நிராகரித்து விட்டது.

மாயாவதி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயம் அவரை விடுவித்தது. அதை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றில் மத்திய அரசு மேல் முறையீடு செய்திருப்பதிலும் முக்கியத்துவம் இல்லாமல் இல்லை.

முலாயம் சிங்கை விட அரசியல் ரீதியில் பெரிய எதிரி மாயாவதிதான் என்பது காங்கிரஸின் கணிப்பு. முலாயம் சிங்குடன் கைகோர்த்தால் அது காங்கிரஸ், சமாஜவாதி ஆகிய இரு கட்சிகளுக்கும் பயனளிப்பதோடு ஒட்டுமொத்த முஸ்ஸிம்களையும் தம் பின்னால் அணிதிரட்டவும் அது உதவும் என்றும் காங்கிரஸ் கருதுகிறது. முலாயமுக்கும் இப்போது காங்கிரஸ் அல்ல முதல் எதிரி முதலில் அவர் மாயாவதியைச் சமாளித்தாக வேண்டும். அத்தோடு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மத்திய அரசு மாநிலம் இரண்டிலுமே பதவியில் இல்லாமல் இருப்பதென்பது மிகவும் சங்கடமான விஷயம்.

மூன்றாவது அணி உருவானாலே அது காங்கிரஸை பலவீனப்படுத்தி பாஜகவை பலப்படுத்துவதில் தான் முடியும் என்பது காங்கிரஸுக்கு நன்றாக தெரியும். 1977லும் பின்னர் 1989லும் காங்கிரஸல்லாத கட்சிகள் ஒன்று சேர்ந்த போது காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்தது. 1990 களில் தொடக்கத்தில் பா.ஐ.க.வளர்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து கட்சிகளின் அணிச் சேர்க்கையில் மாற்றம் ஏற்பட்டதுடன் மும்முனை அரசியல் போக்கு உருவானது, பா.ஜ.க ஆட்சிக்கு வருவதைத் தடுக்க 1996 இல் எச்.டி.தேவெ கௌடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் காங்கிரஸுக்கு ஏற்பட்டது. காங்கிரஸை பலவீனப்படுத்தியே பிராந்தியக் கட்சிகள் வளர்ச்சி அடைந்தன.

இன்று இடது சாரிக் கட்சிகளின் முதல் எதிரியாக பா.ஐ.க. இருந்த போதிலும் 1970களிலும் 19 80 களில் காங்கிரஸ் எதிர்ப்பு நிலையையே அக்கட்சிகள் மேற்கொண்டிருந்தன. 1977இல் ஜன சங்கத்தை உள்ளடக்கிய ஜனதா கட்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்காத போதிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது. 1989 இல் ராஜீவ் காந்தியைத் தோற்கடித்து பா.ஐ.க ஆதரவுடன் வி.பி.சிங் ஆட்சிக்கு வந்தபோது அவரை இடது சாரிகள் ஆதரித்தனர். இந்த மூன்று பரிசோதனைகளின் முடிவிலுமே பாரதீய ஜனதா கட்சிதான் பலம் பெற்றது.

தேர்தலுக்கு பின் பா.ஜ.க.வை ஓரம் கட்டி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் காங்கிரஸின் உதவியை தாம் நாட வேண்டியிருக்கும் என்பது இடதுசாரிகளுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் தாம் அரசியல் பேரம் பேசுவதற்கு காங்கிரஸ் பலமிக்கதாக இல்லாமல் பலவீனமாக இருந்தால் தான் நல்லது என்று இடது சாரிகள் கருதக் கூடும். அதாவது 1996 இல் இருந்ததைப் போல கூட்டணி அரசியல் காங்கிரஸ் ஓர் இளைய பங்காளியாக இருக்க வேண்டும் அல்லது அரசில் பங்கேற்கும் பிராந்தியக் கட்சிகளுக்கும் இடது சாரிகளுக்கும் நிர்வாகத்தில் கூடுதல் பங்கு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதுவே இடது சாரிகளின் விருப்பம்.

கடந்த காலங்களில் தேர்தலுக்குப் பிறகு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவே மூன்றாவது அணி என்பது உருவாக்கப்பட்டது ஆனால் ஐ.தே.மு.கூட்டணியானது தேர்தலுக்கு முன்னரே ஏற்படத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தேர்தலுக்குப் பிறகும் அது அப்படியே நீடிக்கும் என்று கூற முடியாது. ஏனென்றால் தேர்தல் முடிவுக்குப் பிறகு ஏற்படும் அரசியல் கணக்குகளே அனைத்தையும் முடிவு செய்யும். தேர்தலுக்குப் பின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கக் கூடிய சூழ்நிலை உருவானால் சந்திரபாபு நாயுடுவோ அசாம் கண பரிஷத்தோ இந்திய தேசிய லோகதளமோ அக்கூட்டணியின் பக்கம் சாய்வதை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது. தே.ஜ.கூட்டணியுடன் சேர மாட்டோம் என்று பாரூக் அப்துல்லா கூறியிருந்த போதிலும் ஒரு காலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த கட்சி தான் அது என்பதை மறந்து விட முடியாது இடது சாரிகளும் முலாயம் சிங்கும் தான் பா.ஜ.கா.வோடு கைகோக்கும் வாய்ப்பு இல்லை.

இந்திய அரசியல் பிராந்தியக் கட்சிகளின் பங்கான "மூன்றாவது இடத்தின்" அளவானது 2009 தேர்தலில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனினும் மூன்றாவது அணியோ ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியோ தமது சொந்த பலத்தில் ஆட்சி அமைக்கும் நிலையில் நிச்சமாக இருக்காது. தி.மு.க., லல்லு பிரசாத் யாதவ் ஆகியோரையும் தமது அணிக்கு இழுக்க இடதுசாரிகள் முயலக்கூடும். எனினும், இப்போதைக்கு காங்கிரஸை விட்டுவிட்டு அவர்கள் வர வாய்ப்பில்லை. தேசியவாத காங்கிரஸும் தேர்தலுக்கு முன் காங்கிரஸை விட்டு விலக வாய்ப்பில்லை.

இடதுசாரிககளின் குரலை அவ்வப்போது எதிரொலித்துக் கொண்டிருப்பவர் லல்லு பிரசாத். அந்த வகையில் தான் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முன்பே வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்னும் இடதுசாரிகளின் கோரிக்கையை கடந்த வாரம் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்தினார் லல்லு. ஆனால், காங்கிரஸுடன் பேரம் பேசும் தம் திறனை அதிகரித்துக் கொள்வதே அதன் நோக்கம்.

வகுப்பு வாதம், ஏகாதிபத்தியம், தாராளமய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான சுயேச்சையான வெளியுறவுக் கொள்கையில் உறுதி கொண்ட குறைந்தபட்ச பொதுத் திட்டத்தை ஏற்றுக் கொண்ட ஜனநாயக சக்திகளும் இடதுசாரிகளும் அங்கம் வகிக்கக்கூடிய மூன்றாவது மாற்று அணியை இடதுசாரிகளால் வருங்காலத்தில் அமைக்க முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு கட்சியும் தமது சொந்தப் போராட்டத்தை வலுவாக நடத்துவதற்குத் தம்மைப் பலப்படுத்திக் கொள்வதற்கான ஒரு கருவியாகவே இப்போதைக்கு மூன்றாவது அணி இருக்கிறது. அல்லது இடதுசாரிகளைப் போல காங்கிரஸுடன் பேரம் பேசுவதற்கான ஒரு துருப்புச்சீட்டாக அதைப் பயன்படுத்த அக்கட்சிகள் விரும்பக் கூடும். அக் கூட்டணி அதில் அங்கம் வகிக்காத தி.மு.க. ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கும் கூட ஒரு பயனுள்ள கருவியாகும். அது மட்டுமல்ல பா.ஜ.க.வுடன் வலுவாகப் பேரம் பேசுவதற்கு உதவும் என்பதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கும் பயன்படக் கூடிய கருவியாகும் அக் கூட்டணி.

தினமணி

Email this page Your Opinion Print this page
அரிசி விலை தொடர்ச்சியாக அதிகரிப்பதால் வறுமையின் பிடிக்குள் மெதுவாக நகரும் ஆசியா
பேரம் பேசப்பயன்படும் மூன்றாவது அணி
தினமும் சற்றே மது அருந்துதல் நலம் தருமா?
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com