வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகள் விடுமுறையில் வந்து இங்கு தாயைப் பார்த்தபோது அவரின் உடல்நிலை பற்றி மிகவும் வேதனையடைந்தனர். "அம்மா! நீங்கள் ஒழுங்காகச் சாப்பிடுவதில்லையா?" என்று கோரஸ் குரல் எழுப்பினார்கள்.
இவர்கள் விடுமுறை முடிந்து திரும்பிய பின் தாய்க்கு அனுப்பும் தொகையைச் சற்று அதிகரித்துக் கொண்டனர். அத்துடன் நின்று விடாமல் இங்குள்ள அயல்வீட்டு பெண்மணியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாயைப் பற்றி விசாரித்தபோது அவர்களுக்கு திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
"நீங்கள் அனுப்பும் பணத்தை அம்மா எங்கே தனக்குச் செலவழிக்கிறார்! அப்படியே வெளியூரிலுள்ள தனது மகளுக்கு அதாவது உங்கள் சகோதரிக்கு அனுப்பி வைத்துவிடுகிறார். ஒரு சிறிய தொகையை மட்டும் எடுத்துக் கொண்டு அதை வைத்தே சீவியத்தை நடத்துகிறார்" என்று அயல்வீட்டுப் பெண்மணி கூறினார்.
தான் உடல்நலிவு பெற்றாலும் பொருளாதாரத்தில் நலிவடைந்த தனது மகள் மேலும் நலிவடைந்து விடக்கூடாது என்று அந்தத் தாய் நினைத்து செயற்படுகிறார்.
இதுதான் தாய்மை என்பது!