நியூயோர்க்: சூடானின் மேற்குப்பகுதி பிராந்தியமான டார்பூர் மோதல்களில் 300,000 பேர் பலியாகியிருக்கலாமென ஐ.நா.வின் மனித உரிமை விவகாரங்களுக்கான தலைமையதிகாரி தெரிவித்தார்.
முன்னர் 200,000 ஆக இருந்த தொகை 5 வருடங்களில் 50 வீதமாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நியூயோர்க்கில் நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்புச் சபையின் கூட்டத்திலேயே மனிதாபிமான விவகாரங்களுக்கான தலைமையதிகாரி ஜோன் ஹோல்ம்ஸ் இத் தகவலை வெளியிட்டார்.
ஆனால் இது வரையில் 10000 பேர் வரையிலேயே பலியாகியிருப்பதாக சூடான் தெரிவிக்கின்றது.
2006 இல் உலக சுகாதார அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வே 200,000 பேர் வரையில் பலியாகியிருப்பதாக தெரிவித்திருந்தது.
இத் தொகையினுள் மோதல்களில் பலியானவர்களும் நோய் மற்றும் போஷாக்கு குறைபாடுகளினால் பலியானவர்களும் உள்ளடங்குகின்றனர்.
ஆனால், முன்னர் மதிப்பிடப்பட்ட தரவுகளுடன் ஒப்பீடு செய்யப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே இவ் எண்ணிக்கை அமைந்துள்ளதாக செய்தியாளர்களுக்குத் தெரிவித்த ஹோல்ம்ஸ். இது விஞ்ஞான ரீதியான கணிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்ட தரவு என்பதை உறுதிப்படுத்த நான் முயற்சிக்கவில்லை. இது விஞ்ஞான கணிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டதல்ல. மதிபீட்டுத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டதெனத் தெரிவித்துள்ளார்.
ஹோல்ம்ஸின் கருத்தால் கோபமடைந்த ஐ. நாவுக்கான சூடானியத் தூதுவர் ஹோல்ம்ஸினால் இத் தொகை மிகைப்படுத்தப்பட்டு கூறப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் இது சரியானதோ நம்பகத் தன்மை வாய்ந்நதோ அல்ல. இவ் ஆய்வு எவ்வாறு யாரால் மேற்கொள்ளப் பட்டதென்பதை ஹோல்ம்ஸ் எமக்கு அவசியம் விளக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுவரையில் 100,000 பேர்- மட்டுமே பலியாகிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தாம் பாரபட்சமாக நடத்தப்படுவதாகக் கூறும் சமூகத்திலிருந்து உருவான போராளிகள் அரசாங்க இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியமையைத் தொடர்ந்தே 2003 இல் டார்பூர் மோதல்கள் ஆரம்பமாகின என்பது குறிப்பிடத்தக்கது.