Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, April 24, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
பென்சில்வேனியா வெற்றி மூலம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களத்தில் தொடர்ந்தும் ஹிலாரி கிளின்டன்
[24 - April - 2008] [Font Size - A - A - A]
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரை தெரிவு செய்வதற்காக பென்சில்வேனியா மாநிலத்தில் நடைபெற்ற ஆரம்பகட்ட தேர்தல்களில் செனட்டர் ஹிலாரி கிளின்டன் வெற்றி பெற்றுள்ளார்.

முக்கியத்துவம் வாய்ந்த இத்தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட செனட்டர் பராக் ஒபாமாவை தோற்கடித்திருப்பதன் மூலம் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாவதற்கான தனது நம்பிக்கைகளுக்கு ஹிலாரி மீண்டும் புத்துயிர் அளித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளரை தெரிவு செய்வதற்கான பேராளர்களின் எண்ணிக்கையில் ஹிலாரி தொடர்ந்தும் ஒபாமாவை விட பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றபோதும் இவ் வெற்றி ஹிலாரிக்கு புதியதொரு உற்சாகத்தை வழங்கியுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

96 வீதமான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ள நிலையில் 55%-45% என்ற ரீதியில் ஹிலாரி ஒபாமாவை தோற்கடித்துள்ளார்.

தனது வெற்றியை ஆதரவாளர்ளுடன் பகிர்ந்துகொண்ட ஹிலாரி; சிலர் என்மீது குற்றம் சாட்டுகின்றனர், சிலர் இக்களத்திலிருந்து என்னை வெளியேறுமாறு கோருகின்றனர். ஆனால் அமெரிக்க மக்கள் நான் வெளியேறுவதை விரும்பவில்லை. நான் வெளியேறுவதையோ தொடர்ந்து களத்தில் இருப்பதனையோ தீர்மானிப்பதற்கான தகுதி அவர்களுக்கு உண்டு எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அடுத்த கட்டத் தேர்தல் நடைபெறவிருக்கும் இன்டியானா மாநிலத்தில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் ஒபாமா ஹிலாரிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் பென்சில்வேனியாவில் எதிர்பார்த்ததை விட அதிகளவான ஆதரவு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் எங்களுக்கிடையில் மிகத் தீவிரமான போட்டி ஆரம்பமாகியுள்ளது. ஆறு வாரங்களின் பின்னர் எமக்கிடையிலான இடைவெளி குறுகியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

அதிகளவான பேராளர்களைக் கொண்ட மாநிலங்களில் இறுதியாகத் தேர்தல் நடைபெற்ற மாநிலம் பென்சில்வேனியாவாகும். இது 158 பேராளர்களைக் கொண்டதென்பது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகக் கட்சி வேட்பாளராவதற்கு 2024 பேராளர்களை பெறவேண்டிய நிலையில் தனியார் செய்திச் சேவையொன்றின் கணிப்பின் பிரகாரம் இதுவரை ஒபாமா 1720 பேராளர்களையும் ஹிலாரி 1588 பேராளர்களையும் பெற்றுள்ளனர்.

அடுத்தகட்ட தேர்தல்கள் எதிர்வரும் மே 6 இல் வடக்கு கரோலினா மற்றும் இன்டியானா மாநிலங்களில் நடைபெறவுள்ளது.

அமெரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதி என்ற பெருமையைப் பெறுவதற்கு போராடும் ஒபாமா பத்திற்கு ஒன்பது என்ற ரீதியில் கறுப்பின மக்களின் ஆதரவைப் பெற்றிருப்பதுடன் இளைஞர்களின் ஆதரவும் அதிகளவில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமைக்காகப் போராடும் ஹிலாரி தொழிலாளர்களின் வர்க்கம் மற்றும் முதியவர்களின் ஆதரவைப் பெற்றிருப்பதுடன் சனத்தொகையில் பாதிக்கும் மேற்பட்ட பெண்களின் ஆதரவைப் பெற்றுள்ளார்.

பேராளர்களின் எண்ணிக்கையில் பின்தங்கிய நிலையில் இருந்தாலும் பெரிய மாநிலங்களில் பெற்ற வெற்றி வேட்பாளராவதற்கான வாய்ப்பை வழங்குமென ஹிலாரி கருதுவதாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.

இருந்தபோதும் இந்த வாய்ப்பை பெறுவதற்கு அடுத்த கட்ட தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் மிக அதிகளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் ஒபாமாவை வெல்ல வேண்டிய தேவை ஹிலாரிக்கு இருப்பதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

குடியரசுக் கட்சியின் வேட்பாளராக ஜோன் மக்கெய்ன் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Email this page Your Opinion Print this page
பென்சில்வேனியா வெற்றி மூலம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களத்தில் தொடர்ந்தும் ஹிலாரி கிளின்டன்
தலாய் லாமாவுக்கு பிரான்ஸின் கௌரவப் பிரஜை அந்தஸ்தை வழங்குவதற்கு சீனா கடும் எதிர்ப்பு
`டார்பூர் மோதலில் 3 இலட்சம் பேர் பலி'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com