*புவிதின ஆய்வில் தெரிவிப்பு
எமது பிரதேச விவசாயிகள் தேவைக்கு அதிகமான உரப்பசளைகளையும் கிருமிநாசினிகளையும் பயன்படுத்தி வருவதால் எமது மண்ணின் உயிர்ச்சத்தும் மண்வளமும் அழிந்து வருகின்றது.
இவ்வாறு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விவசாய பீட, விவசாய உயிரியல் பிரிவுத்தலைவர் கலாநிதி கே.முகுந்தன் தெரிவித்தார்.
நல்லூர் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்த உலக புவிதினத்தையொட்டிய ஆய்வுப்பட்டறையில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நல்லூர் பிரதேச செயலாளர் எஸ்.செந்தில்நந்தன் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில் கலாநிதி முகுந்தன் மேலும் கூறியதாவது;
உணவுப்பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக மிதமிஞ்சிய கிருமிநாசினிகளைப் பயன்படுத்துவதால் சூழல் மாசடைவதுடன், உணவுப் பொருட்களும் நச்சுத்தன்மையடைகின்றன.
மரவளம் அழிக்கப்பட்டுவருவதால் பூமி வெப்பமடைவதுடன், நன்னீர் வளமும் அழிந்து அதனால் நீர் நஞ்சடைந்து வருகிறது.
இதனால்தான் எமது சந்ததியை உணவுப் பஞ்சத்துக்கு ஆளாகாமலும் உயிராபத்துகளில் இருந்தும் நோய் நொடிகளில் இருந்தும் எம்மைப் பாதுகாக்க இயற்கையைப் பேணுவோம்.
இன்றைக்கு எமக்குத்தேவை தங்கமான பூமி அழியாதிருக்கப் போராடுவதுதான்.
இன்றைக்கு யாழ்ப்பாணத்தில் மண்வளம் அழிந்துவருவதை மக்கள் உணர்ந்து வருகின்றனர். பலர் சேதனப் பசளையின் பயன்பாட்டை உணர்ந்து, அதனைப் பயன்படுத்தி மண்வளத்தை போஷாக்குள்ளதாக மாற்றிவருகின்றனர். தலைமுறை தலைமுறையாக தம்வாழ்வுக்கு உரமூட்டிய தாங்கள் நிலம் பாதுகாக்கப் படவேண்டுமென்பதில் உறுதியாகவுள்ளனர்.
அண்மையில் சுன்னாகத்தில் கத்தரிக்கன்றுகள் அனைத்தும் அழிந்தன மழை வெள்ளம் தோட்டங்களில் தேங்கி நின்றதால், மண்ணின் மூலகங்கள் அழிந்ததால் அதைத்தடுக்கமுடியாமல் வேரில் பூஞ்சணம் நோய் ஏற்பட்டதனால் முழுகத்தரிக்கன்றுகளும் அழிந்ததால் கத்தரிக்காய் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்தது.
மண்ணில் நோய் தாக்கம் ஏற்படுவதற்கு காரணம், அங்கீகாரம் இல்லாத விதைகளைப் பயன்படுத்துவதாகும். முதலில் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்ட விதை உருளைக்கிழங்குடன் அழுகல் நோயின் தன்மையைத் தரக்கூடிய கிருமிகளும் இந்த மண்ணுக்குள் ஊட்டப்பட்டதன் விளைவாக, கால்நூற்றாண்டுகளாய் எமது மண்ணில் இந்நோயைக் கட்டுப்படுத்த முடியாதிருக்கிறது.
வலிகாமம் தென்மேற்கில் ஒருவர் ஈரானில் இருந்து பத்துக்கிலோ கோதுமை விதையை எடுத்துவந்து இப்பிரதேசத்தில் விதைத்துள்ளார். ஒரு நாட்டுக்குள் விதைகளை எடுத்துவருவற்கு நாட்டின் எவருக்கும் அரசு அதிகாரம் வழங்கவில்லை. அப்படியிருக்க சம்பந்தப்பட்டவர் எடுத்துவந்த கோதுமை விதை முளைத்து நல்லபயிராக வளர்ந்திருப்பதாகவும், அவற்றில் இருந்து விதைமணிகள் வரவில்லை என ஆதங்கப்படுவதையும் காண்கின்றோம்.
கோதுமைப்பயிர் வளர்வதற்கான சுவாத்தியநிலை, மண்வளம், எல்லாப் பகுதியிலும் இருக்குமாயின் எல்லோரும் கோதுமை விளைச்சலில் ஈடுபட்டு விடுவார்கள். கோதுமைப்பயிர் குடும்பத்தைச் சேர்ந்தது நெல்வர்க்கம். இவர்கள் எடுத்துவந்த கோதுமை விதையோடு நெல்வர்க்கத்தை பாதிக்கும் கிருமியும் எமதுவளமான பிரதேசத்தில் ஊடுருவினால் எம்வேளாண்மையும் அழியுமென்பதை மறந்து விடக்கூடாது.
இன்றைக்கு பூலோகம் வெப்பமடைந்துவருகின்றது. இதைத்தடுக்கவேண்டுமானால், மரங்களை அதிகமாக நாட்டுவோம். மரமழிவதை இயன்றளவு தடுப்போம் அரிதான மரங்களை எம் சொத்தாக மதிப்போம். சுற்றாடலுக்குத் தீங்கு ஏற்படாதவாறு அபிவிருத்திகள் திட்டமிடப்படவேண்டும். இன்றைக்கு எமக்குத் தேவை மனிதம். எதிர்காலத்துக்கே நாம் மனிதத்தை எப்படிப் பயன்படுத்தப்போகிறோம் என்பதாகும் என்றார்.
நிகழ்வில் 300 பயனாளிகளுக்கு பயன்தரும் பழமரக்கன்றுகளான மாமரம், தோடை, எலுமிச்சை, ஆகியவை வழங்கப்பட்டன.
இந்நிகழ்வுக்கான அனுசரணையை அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் வழங்கியிருந்தது.