`அரச சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தில் அரச சேவை ஓய்வூதியர்கள் அங்கத்துவம் பெறுவதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.'
இவ்வாறு யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் மரியதாசன் ஜெகூ இந்த நிதியத்தின் யாழ்ப்பாண பிரதேச சங்கத்தின் வருடாந்த கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போது கூறினார்.
இந்த நிதியத்தின் தலைவர் வி.சக்திவேல் தலைமையில் யாழ்.புனிதர் சாள்ஸ் மகா வித்தியாலய மண்டபத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் தமது உரையில் மேலும் கூறியதாவது;
அங்கத்தவர்களின் மரணக் கொடையாக அவர் செலுத்திவந்த சந்தாப் பணத்தின் பத்துமடங்கு அவருடைய பின் உரித்தாளருக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதனைவிட உயர்கல்வி பயில்கின்ற ஒரு பிள்ளைக்கு மாத்திரம் வருடாந்தம் 3,000 ரூபா வீதம் புலமைப்பரிசில் வழங்கப்படுகின்றது.
ஆகக்கூடிய கடன் தொகையாக 10,000 ரூபா வழங்கி வருகின்றனர். வைத்தியசாலையில் இருக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் நாளொன்றுக்கு 150 ரூபா வீதம் ஆகக்கூடிய தொகை 1,500 ரூபா கொடுப்பனவைப் பெறமுடியும்.
மூளை, இருதயம், சிறுநீரகம், புற்றுநோய் சத்திரசிகிச்சைக்கு 5,000 ரூபா கிடைக்கும். கண் சிகிச்சைக்கும் நிதி வழங்குகின்றார்கள். இத்தனை வசதிகளையும் ஒட்டுமொத்தமாகப் பெறுவதற்கு சங்கத்தில் ஓய்வூதியர்கள் அங்கத்துவம் பெறவேண்டும்.
ஒவ்வொரு அமைப்பும் சிறப்பாக செயல்படுவதற்கு முக்கிய காரணகர்த்தாவாக விளங்குபவர்கள், அதன் நிர்வாகிகள் தான். இவ்வமைப்பில் இதுவரை 275 உறுப்பினர்கள் இணைந்து நன்மைகளைப் பெற்றுவருவது நிர்வாகிகளின் தன்னலமற்ற சேவையைக் காட்டுகின்றது.
இன்றைய வருடாந்த கூட்டத்திலும் ஆற்றலும் ஆளுமையுமுள்ள நிர்வாக சபையை தெரிவுசெய்து சங்கத்துக்கு வலுவான கட்டமைப்பை ஏற்படுத்துமாறு வேண்டுகிறேன் என்றார்.
நிகழ்வுக்கு தலைமை தாங்கிய சங்கத்தின் தலைவர் வி.சக்திவேல் தமது தலைமையுரையில் தெரிவித்ததாவது; சங்கத்தில் அங்கத்துவம் பெற்றோருக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். யாழ்ப்பாணப் பிரதேசத்தில் எமது சங்கத்தில் பலர் இணைந்து நன்மைகளைப் பெறாதிருப்பது வேதனை தரும் விடயமாகும். எல்லோரும் இணைந்து எமது சங்கத்தை பலம்பொருந்திய அமைப்பாக மாற்றுவதன் மூலம் தாய்ச் சங்கத்தில் எமது கிளை வலுவுள்ள குரல் கொடுக்கும் அமைப்பாக விளங்கவேண்டுமெனவும் வேண்டினார்.
வருடாந்த பொதுக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகளாக பின்வருவோர் தெரிவாகினர். தலைவர் வி.சக்திவேல், செயலாளர் இ.தவராசா, உபசெயலாளர் க.கணேசலிங்கம், பொருளாளர் எஸ்.ஆர்.யோகநாதன், நிர்வாக சபை உறுப்பினர்களாக இ.செல்வரத்தினம், ஏ.ஆனந்தராஜா, எம்.பஞ்சலிங்கம் ஆகியோரும் தெரிவாகினர்.