*107 ஆவது ஜனன தின வைபவத்தில் தேரர்
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான அமரர் டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க வெளியிட்ட கருத்துக்களையும் பிரேரணைகளையும் அன்று செயற்படுத்தியிருந்தால் இன்று நாட்டில் இனப்பிரச்சினையோ, யுத்தமோ ஏற்பட்டிருக்காது என மாத்தறை பொல்ஹேன பழைய விகாராதிபதியான சங். பண்டிதர் அஹலப்பே யத்திரதீன தேரர் கூறினார்.
டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்கவின் 107 ஆவது ஜனன தின வைபவத்தில் உரையாற்றும்போதே தேரர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்;
"டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க சட்ட நிரூபண சபையிலும் பாராளுமன்றத்திலும் பல கருத்துக்களையும் பிரேரணைகளையும் முன்வைத்தார். சில யோசனைகளையும் கூறினார். ஆனால், அன்றைய ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் அவற்றைக் கேட்கவில்லை.
இந்த அரசியல்வாதிகளால் முன்னெடுத்துச் செல்லப்படும் செயற்திட்டங்களால் நாட்டில் எதிர்காலத்தில் இனப்பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்று தீர்க்கதரிசனமாகக் கூறியதுடன் இவ்வாறான செயற்பாடுகளை கைவிடுங்கள் எனவும் ஆணித்தரமாக துணிச்சலுடன் எடுத்துக் கூறிய ஒரு நேர்மையான அரசியல்வாதியே டாக்டர் விக்கிரமசிங்க.
நாட்டில் இன்று என்ன நடைபெறுகிறது என்பதை சகலரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். டாக்டர் விக்கிரமசிங்கவின் ஆலோசனைகளின்படி செயற்பட்டிருந்தால் இன்று இலங்கை எதுவித பிரச்சினைகளுமற்ற உலகிலேயே ஒரு சிறந்த நாடாக மிளர்ந்திருக்கும்" என்றார்.
அமைச்சர் கஜதீர
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர தமது உரையில்; "டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க ஒரு நேர்மையான சிறந்த அரசியல்வாதி. சகல இன மக்களாலும் நேசிக்கபப்ட்டவர்.
அவரது பாசறையில் பயிற்சி பெற்றவர்கள்தான் டீ.வை.துடாவை, டியூ.குணசேகர, கந்தசாமி போன்ற போராளிகள்.
டாக்டர் விக்கிரமசிங்க தனக்காக வாழாமல் தன் வாழ்நாள் முழுவதையும் ஏழை மக்களுக்காகவே செலவிட்டார். ஏழை மக்களின் விமோசனத்துக்காக தன்னை அர்ப்பணித்தார்.சகல இன மக்களாலும் சகோதரா என்றே அழைக்கப்பட்டார்.
தன்னிடமுள்ள சொத்துக்களை மக்களுக்காகவே செலவிட்டார். ஏனைய அரசியல்வாதிகளைப் போல சொத்துச் சேர்க்கவில்லை. இவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள இந்த நாட்டிலிருந்து மட்டுமல்ல உலக நாடுகளிலிலுமிருந்தும் பல தலைவர்கள் வந்திருந்தனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அ.அமிர்தலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தர் கல்யாண சுந்தரம் போன்றவர்களின் இரங்கலுரைகளில் இருந்து டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க ஒரு இனவாதியல்ல எனவும் முழு உலகமும் மதிக்கும் சிறந்த அரசியல்வாதி எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளது" என்றார். கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர் கட்சி முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் மாத்தறை ஹக்மனை சந்தியிலுள்ள மறைந்த தலைவரின் உருவச் சிலைக்கு மலர் வளையங்களை வைத்து மரியாதை செலுத்தினர்.