பாராளுமன்ற வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரின் வாகனங்களை கொள்ளையடித்து சென்றதாக குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திருகோணமலை மாவட்ட மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜேசேகரவை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு மேலதிக நீதிவான் அஜித் அனவரட்ன முன்னிலையில் இவர் திங்கட்கிழமை ஆஜர் செய்யப்பட்ட போது இவரை 5ஆயிரம் ரூபா காசுப்பிணையிலும் ஒரு லட்சம் ரூபா சரீரப்பிணையிலும் செல்ல அனுமதித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் அதிருப்திக் குழு பாராளுமன்ற உறுப்பினர்களான பியசிறி விஜயநாயக்க மற்றும் அச்சல ஜாகொட ஆகியோருக்கு சொந்தமான வாகனங்களை ஏப்ரல் 9ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இருந்து கொள்ளையடித்து சென்றதாக இவர் மீதும் வேறு இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த இரு சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல நீதிவான் அனுமதி வழங்கியிருந்தார்.
சம்பவதினம் பாராளுமன்ற வளாக வாகனத்தரிப்பிடப் பகுதியில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் இருவரையும் அடையாளம் காட்டினார்.
மேல் விசாரணையை மே 26ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதி சந்தேக நபர்களை அன்றைய தினம் மன்றில் ஆஜராகும் படி உத்தரவிட்டார்.