*பசில்ராஜபக்ஷ தெரிவிப்பு
கிழக்கு மாகாணத்தை புலிகளிடமிருந்து விடுவித்ததன் மூலம் முஸ்லிம்களுக்கு எமது அரசாங்கமே விமோசனம் அளித்தது. எனவே இந்த மாகாண சபைத் தேர்தலில் அளுங்கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெறப் போவது உறுதியென பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணியின் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பிரசார கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிண்ணியா குறிஞ்சாக் கேணி ஹஸனாத் அநாதை இல்லத்தில் இடம் பெற்ற போது அதில்கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது;
கிழக்கு மாகாண முஸ்லிம்கள் புலிகளின் நெருக்கடிக்கு ஆளாகி இருந்தனர். கிழக்கு மீட்கப் பட்டதன் மூலம் முஸ்லிம்களுக்கு நிம்மதி, விமோசனம் என்பன ஏற்பட்டுள்ளன. இதனை உருவாக்கியது எமது அரசாங்கம் தான். அது மாத்திரமன்றி இப்பகுதி முஸ்லிம்கள் காலாகாலமாக எதிர்பார்த்திருந்த பாரிய அபிவிருத்தித் திட்டங்களை தற்போது நாம் ஆரம்பித்திருக்கிறோம். கிண்ணியா, மூதூர் ஊடான மட்டக்களப்பு நெடுஞ்சாலை, அதிலுள்ள பாலங்கள் என்பன மிக விரைவில் நிர்மாணிக்கப்படவுள்ளன.
கடந்த 20 வருடங்களாக பொதுமக்கள் போக்குவரத்துக்குத் தடை செய்யப்படிருந்த கிண்ணியா, மூதூர் தரைவழிப் பாதயைத் திறுந்து இவ்விரு பிரதேச மக்களுக்கும் பெருநன்மையை ஏற்படுத்திக் கொடுத்தோம். கிண்ணியா பாலநிர்மாணம், கிண்ணியா - தம்பலகமம் நெடுஞ்சாலை புனரமைப்பு ஆகியனவற்றையும் ஆரம்பித்துள்ளோம். இவற்றின் மூலம் இப்பகுதி மக்கள் பாரிய நன்மைகளை விரைவில் அனுபவிக்கவுள்ளனர்.
நடைபெறப் போகும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெறப் போவது உறுதியானது. எனவே, சகலரும் எமது அணியில் இணைந்து வெற்றியின் பங்கு தாரர்களாக மாற வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்களான அதாவுல்லா, ரிசாத் பதியுதீன், நஜீப் ஏ மஜீத், சுசந்த புஞ்சிநிலம, பிரதியமைச்சர் ஹுசைன் பைலா, மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா. ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ.எச்.எம். அஸ்வர் ஆகியோரும் உரைாயாற்றினர்.