*ஜனாதிபதியின் ஆலோசகர் அஸ்வர்
"ஐ.தே.க. என்ற வாகனத்திற்கு ரணில் என்ற சாரதி இருக்கும் வரை முஸ்லிம் காங்கிரஸ் அந்த வாகனத்தில் ஏறாது" என்று சூளுரைத்தவர் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவருடைய பாசறையிலேயே வளர்ந்ததாகக் கூறிக்கொள்ளும் அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அந்த ஐ.தே.க. என்ற வாகனத்திலேயே சவாரி செய்துகொண்டிருக்கின்றார். இது அவரது மறைந்த தலைவருக்குச் செய்யும் செஞ்சோற்றுக் கடனா? எனக் கேள்வி எழுப்பினார் ஜனாதிபதியின் ஆலோசகரும், ஊடக ஆலாட்சி அதிகாரியுமான ஏ.எச்.எம். அஸ்வர்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கிண்ணியாப் பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார். அங்கு அஸ்வர் மேலும் உரையாற்றுகையில்;
மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் முஸ்லிம் சமூகத்தின் உரிமை காத்து, சமூகத்தின் நலன்காக்க உருவாக்கிய கட்சியின் தனித்துவச் சின்னமான மரத்தை அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் ஐ.தே.க.வுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டார்.
சர்வதேச வல்லரசுகள் விரித்துள்ள சதிவலையில் முஸ்லிம்களையும் சிக்கவைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் துணைபோயிருக்கின்றார். ஐ.தே.க.வுடன் அவர் கூட்டுச் சேர்ந்ததன் உண்மையான நோக்கமும் இதுவே. இந்த சதிவலைக்குள் முஸ்லிம்கள் குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் அகப்பட்டுவிடக்கூடாது என்பதுதான் எனது வேண்டுகோள்.
உமா ஓயா, ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றுக்கு வழங்கும் நன்கொடைகளுக்குப் புறம்பாக, மேலும் 2000 மில்லியன் டொலர்களை வீடமைப்புக்காக தருவதாக ஈரான் உறுதியளித்துள்ளது. இதனை கிழக்கு மாகாண வீடமைப்புக்கே செலவிடப்போவதாக ஜனாதிபதி தெரிவித்திருப்பது எம்மைப் பூரிப்படையச் செய்கிறது. இது சர்வதேச இஸ்லாமிய உலகம் எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நல்லாட்சிக்கு வழங்கியுள்ள அங்கீகாரத்தையே குறிக்கிறது.
இதேபோன்று சவுதி அரசின் உதவியோடு கிண்ணியா மக்களின் மிக நீண்டகால அவலம் நீக்கப்படவுள்ளது. கிண்ணியாப் பாலம் கட்டி முடிக்கப்பட்டதும் மக்கள் குளு குளு பஸ்வண்டிகளில் நேராகவே கிண்ணியாவுக்கும் ஏனைய பிரதேசங்களுக்கும் செல்வதற்கு வசதியாக இருக்கும். இதனை உங்களின் பாராளுமன்ற உறுப்பினரும், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான என்.ஏ. அப்துல் மஜீத் மேற்பார்வை செய்துவருகின்றார்.
அத்துடன், இறக்கக்கண்டி, புல்மோட்டை, புடவைக்கட்டு, குச்சவெளி போன்ற இடங்களிலும் பாலங்கள் கட்டும் பணிகள் மிகத் துரிதமாக இடம்பெற்றுவருகின்றன என்றும் அஸ்வர் மேலும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீன், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் நஜீப் ஏ. மஜீத், வேட்பாளர்களான மௌலவி எஸ்.எல்.எம். ஹஸன் (அல் - அஸ்ஹரி). ஆரியவதி கலப்பதி, டாக்டர் திடீர் தௌபீக், டாக்டர் ஏ.எம். லாபீர், கே.எம். முஜீப், இலங்கை கனிப்பொருள் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாபிர் நஸார், மாப்பிள்ளை ஆப்தீன் உட்பட பலரும் உரை நிகழ்த்தினர்.