*கிழக்கு முஸ்லிம்களுக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன் அறிவுரை
சர்வதேச நாடுகளே வீரத்தளபதியாகப் போற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு முஸ்லிம்கள் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீன், கிழக்கு மாகாண சபை தேர்தலில் நாம் தோல்வியடைந்தால் கூட ஜனாதிபதியை அல்லது அரசாங்கத்தையோ எதுவும் செய்து விடமுடியாதென்றும் கூறினார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் என்பது இந்தப் பிரதேசத்திலே வாழுகின்ற முஸ்லிம்களுக்கு மிகவும் முக்கியமான தேர்தலாகும். இந்த தேர்தலை ஏனைய தேர்தல்களைப் போன்று முஸ்லிம்கள் ஏனோதானோ என்று அலட்சியம் செய்து விடக்கூடாது. இப்பிரதேசத்திலே வாழுகின்ற முஸ்லிம்களின் எதிர்காலம், பாதுகாப்பு, அபிவிருத்தி என்பன இந்தத் தேர்தலிலே தங்கியுள்ளது என்பதால் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னமான வெற்றிலைச் சின்னத்திற்கு தமது வாக்குகளை அளிக்க வேண்டும்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களை ஆதரித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கிண்ணியா ஹஸனாத் மகளிர் பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான ஏ.எல்.எம்.அதாவுல்லா, பந்துல குணவர்தன, நஜீத் ஏ மஜீத், சுசந்த புஞ்சிநிலமே, பிரதியமைச்சர்களான ஹுசைன் ஏ பைலா, கே.ஏ.பாயிஸ், நிஹ்மல் பெரேரா மற்றும் மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா., ஊடக ஆலாட்சி அதிகாரி ஏ.எச்.எம்.அஸ்வர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு அமைச்சர் றிஷாத் பதியுதீன் மேலும் உரையாற்றுகையில்;
இந்த தேர்தல் முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. முஸ்லிம்கள் பிரிந்து நின்று வாக்களித்தாலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே வெற்றிபெறும். முஸ்லிம்களாகிய நாம் நமது சமூகத்தைச் சேர்ந்த ஒரு முதலமைச்சரை பெறமுடியாமல் போகும். அப்படியானால் எதிர்வரும் ஐந்து வருட காலம் நாம் துன்பம் துயரம் நிறைந்த அவல வாழ்க்கையே வாழ நேரிடும். நாம் சிந்தித்து ஒற்றுமைப்பட்டு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக்கொண்டால் எமது முஸ்லிம் சகோதரர் ஒருவரே முதலமைச்சராக வருவார்.
கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே வெற்றி பெறும் என்பது உறுதியாகிவிட்டது. முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் ஒன்றுபட்டு வாக்களித்து முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக்கொண்டால் முஸ்லிம் ஒருவரே முதலமைச்சராக வருவார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கிழக்கு மாகாணத்தை மீட்டுத்தந்தது மட்டுமன்றி சகல இன மக்களும் இந்த மண்ணில் சுத்திரமாகவும் நிம்மதியாகவும் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதுடன் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தியில் மிகுந்த அக்கறையோடு செயற்பட்டு வருகின்றார்.
மூதூர் முஸ்லிம் மக்கள் அகதியாக்கப்பட்டபோது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அதிக அக்கறை எடுத்த காரணத்தினாலேயே விரைவில் அந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர். அவ்வாறான நிலை ஏற்படாதிருந்தால் வடமாகாண முஸ்லிம்கள் கடந்த 17 வருட காலம் அனுபவித்து வரும் நிலையே ஏற்பட்டிருக்கும். இந்த விடயத்திற்காவது முஸ்லிம்கள் ஜனாதிபதிக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
கிழக்கு மண்ணை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ரணில் பிரபா ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து யாருக்கும் அச்சப்படாமல் குறுகிய நாட்களில் வெளியேற்றப்பட்ட மூதூர் முஸ்லிம்களை அந்தப்பிரதேசங்களில் மீள்குடியேற்றி வெற்றி கண்டுள்ளார். இன்று சர்வதேச நாடுகளே அவரை வீரத்தளபதியாக போற்றுமளவுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திகழ்கின்றார்.
ஜனாதிபதிக்கும் ரவூப் ஹக்கீமுக்கும் இருக்கின்ற சிறுசிறு பிரச்சினை காரணமாக இன்று அவர் முஸ்லிம்களை பலிக்கடாவாக்கப் பார்க்கின்றார். அவர் எடுத்திருப்பது பிழையான முடிவு என்பதை நிச்சயமாக எதிர்வரும் 10 ஆம் திகதி நிரூபிக்கப்போகின்றது. முஸ்லிம்களாகிய நாம் ஆழமாக சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். அவருடைய இந்த பிழையான முடிவை ஒவ்வொரு முஸ்லிம்களும் வீடுவீடாகச் சென்று மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இந்த மண்ணிலே தேர்தல் கேட்கும் அவருக்கு முஸ்லிம் முதலமைச்சர் பெறுவதன் தேவைபற்றியோ, முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றியோ எவ்வித அக்கறையுமில்லாமல் சிறுபிள்ளைத்தனமாக எதிர்க்கட்சியாக இருக்கப்போகின்றார் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றார்.
முஸ்லிம் காங்கிரஸ் 10 அல்லது 12 ஆசனங்களை ஐக்கிய தேசியக் கட்சியோடு சேர்ந்து பெறும் எங்களுக்கு முதலமைச்சர் பதவியல்ல முக்கியம் எதிர்க்கட்சியாக இருந்தாலும் கிழக்கு மண்ணிலே ஜனநாயகத்தை கொண்டுவருவதற்காக வேண்டி போட்டியிடுகின்றோம் என்று தைரியமாக சொல்லுகின்றார்.
இந்தத் தேர்தலிலே வெற்றியோ தோல்வியோ எதுவந்தாலும் ஜனாதிபதியையோ, இந்த அரசாங்கத்தையோ அல்லது இந்த அமைச்சரவையோ ஒன்றும் செய்துவிட முடியாது. இந்த தேர்தலில் வெற்றியென்றால் இந்தப் பிரதேசம் வெற்றிபெறும் அவ்வாறு வெற்றியடைந்தால் இந்தப் பிரதேசம் பாதுகாக்கப்படும் அபிவிருத்தி செய்யப்படும்.
முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக எழுச்சிக்காக மர்ஹும் அஷ்ரப் கண்ட கனவை நனவாக்க, இந்த கட்சியை பாதுகாக்க, நாம் அனைவரும் ஒன்றுபடவேண்டிய தருணம் வந்துவிட்டது. எனவே முஸ்லிம்களாகிய நாம் முதலமைச்சராக முஸ்லிம் வரவேண்டுமா அல்லது வேறொருவர் வரவேண்டுமா என்பதை சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.