வடமேல் மாகாணத்தின் போக்குவரத்து சேவைகளை மேற்கொள்வதற்கான பஸ் வண்டிகளுக்கென புதிதாக வீதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குதல் இடை நிறுத்தப்பட்டிருப்பதாக வடமேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் துஷித்த டி.சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது;
பிரதான பாதைகளிலும் இணைப் பாதைகளிலும் போதியளவு பஸ் வண்டிகள் சேவையிலீடுபடுத்தப்பட்டிருக்கும் நிலையில் புதிய பாதை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் பட்சத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படக் கூடிய நிலையுள்ளது.
இதனால், தற்போது சேவையிலீடுபடுத்தப்பட்டுள்ள பஸ் வண்டிகளுக்கு போதிய வருமானம் கிடைக்காமல் போகலாம் எனவும் புதிதாகப் பாதை அனுமதிப் பத்திரம் பஸ்களுக்கு வழங்குதல் இடைநிறுத்தப்பட்டமைக்கு பிரதான காரணமாகும்.
இதேவேளை, தற்போது வீதி அனுமதிப்பத்திரங்களைப் பெற்று சேவையிலீடுபட்டிருக்கும் பஸ் வண்டிகள் சேவையை விட்டு விலகிச் செல்லுமிடத்து அல்லது தகுந்த காரணங்களுக்காக அவற்றின் அனுமதிப் பத்திரங்கள் இரத்துச் செய்யப்படும் போது குறித்த பஸ் வண்டிகள் சேவையாற்றிய பாதைகளுக்கான புதிய அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொடுக்க இயலும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.