*பாவனையாளர்கள் விசனம்
அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையில் அரிசியினை விற்பனை செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதும் நுகர்வோருக்கு இதன் பலன் கிட்டவில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், சில்லறைக் கடைகளில் அரிசி முன்னைய விலையிலேயே விற்பனை செய்யப்படுவதாகவும் மக்கள் முறையிட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக சில்லறை வியாபாரிகளிடம் வினவியபோது, மொத்த வியாபாரிகள் அரிசியை பதுக்கி வைத்துள்ளதோடு தாம் புதிய விலையில் அரிசியை விற்பனை செய்வதால் தமக்கு பெருமளவு நட்டமேற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளனர்.
பொருட்களின் விலை அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கும் பொருட்களை விற்பனை செய்யும்போது அதிகளவு இலாபமடையும் வர்த்தகர்கள் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்ய முன்வராதது ஏன் எனவும் நுகர்வோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பொதுமக்களின் நலனை கவனத்தில் கொண்டு மொத்த வியாபாரிகளும் சில்லறை வியாபாரிகளும் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.