* நோயாளர்கள் பெரும் அவதி
கெக்கிராவ வைத்தியசாலை வைத்தியர்களும் ஊழியர்களும் நடாத்திவரும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தினால் வைத்தியசாலைப் பணிகள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
கெக்கிராவ வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரியின் வாசஸ்தலத்திற்குள் மது அருந்துவதற்கு முற்பட்ட கெக்கிராவ உதவிப் பிரதேச செயலாளர் உட்பட்ட குழுவினரை தடுத்ததை அடுத்து ஏற்பட்ட தகராறில் கெக்கிராவ உதவிப் பிரதேச செயலாளர் கெக்கிராவ வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரியைத் தாக்கியுள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி நடைபெற்ற இச்சம்பவம் பற்றி கெக்கிராவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளபோதும் கெக்கிராவ பொலிஸார் உதவிப் பிரதேச செயலாளருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காததை அடுத்தே கடந்த 22 ஆம் திகதி முதல் வைத்தியசாலை வைத்தியர்கள் உட்பட்ட ஊழியர்கள் அனைவரும் பணி பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இரண்டாவது நாளாக நேற்றும் செவ்வாய்க்கிழமையும் இப்பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தினால் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு சிகிச்சை நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதுடன் உள்நோயாளர் பிரிவு சிகிச்சை நடவடிக்கைகளிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த பல நூற்றுக்கணக்கான நோயாளர்கள் ஏமாற்றத்துடன் இரு நாட்களும் திரும்பிச் சென்றதைக் காணக்கூடியதாகவிருந்தது.
குறித்த உதவிப் பிரதேச செயலாளருக்கு எதிராக தக்க நடவடிக்கையினை பொலிஸார் எடுக்கத் தவறும் பட்சத்தில் பணி பகிஷ்கரிப்புப் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.