முன்னாள் இராணுவத் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உட்பட இரு முன்னாள் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் படைமுகாம்களுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தலைமையகம் நேற்று புதன்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவும் கேணல் ஜெயவி பெர்னாண்டோவும் அண்மைக் காலமாக வடக்கில் இடம்பெறும் படை நடவடிக்கைகள் தொடர்பாக மிகக் கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டு வருவதையடுத்தே, இவ்விருவரும் இராணுவ முகாம்களுக்குள் நுழைவதற்கு இராணுவ தலைமையகத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன் ஜெனரல் ஜானக பெரேரா ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கும், கேணல் ஜெயவி பெர்னாண்டோ சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கும் வழங்கிய பேட்டி, படைத் தரப்புக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது.
இராணுவத் தலைமைப்பீடத்தையும் அவர்களது போர் நடவடிக்கை முறைகளையும் இந்தப் பேட்டிகளில் இவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.