மனித உரிமைகள் விவகாரத்தில் முன்னேற்றத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கிழக்கில் இடம்பெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் நீதியானதும், சுதந்திரமானதுமான முறையில் இடம் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் அமெரிக்கா இலங்கைக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.
இலங்கைக்கு வருகை தந்திருக்கும் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி வெளிவிவகார அமைச்சர் டொன் காம்பை மேற்கோள் காட்டி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை விடுத்திருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கைக்கு ஈரான் ஜனாதிபதி அகமதி நிஜாத் வருகை தரவுள்ள நிலையில், ஒருவாரத்திற்கு முன்பாக அமெரிக்க உதவி வெளிவிவகார அமைச்சர் டொன் காம் கொழும்புக்கு வருகை தந்திருக்கிறார். அவரின் வருகை இலங்கை அரசாங்கத்துடன் அமெரிக்க அரசு கிரமமாக மேற்கொண்டு வரும் கலந்துரையாடல்களின் ஓரங்கமேயென கூறப்பட்டிருக்கிறது.
இலங்கை அரசாங்கத்துடன் அமெரிக்கா தொடர்ந்தும் பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்கும் அதே சமயம், இலங்கையின் அரசியல் வர்த்தக சிவில் சமூகத் தலைவர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் என்று டொன் காம் கூறியுள்ளார்.
`நாங்கள் கலந்துரையாடிய பல விடயங்கள் கடினமானவையாகும். குறிப்பாக மனித உரிமைகள் மோதலுக்கு தீர்வு காண்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இவற்றில் முன்னேற்றம் ஏற்படுவதை பார்ப்பதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பாகும்' என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களை நிகழ்த்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ள தருணத்தில் தெஹ்ரானுடன் கொழும்பு தொடர்புகளை அதிகரித்து வருவதையிட்டு அமெரிக்கா விசனமடைந்திருப்பதாக நம்பப்படுகிறது.