* கருணாநிதி முன்மொழிந்தார்; காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க.வரவேற்பு
இலங்கையில் இடம்பெற்றுவரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவந்து முறையான அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு இந்திய மத்திய அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டுமெனக்கோரும் தீர்மானமொன்றை தமிழக சட்டசபை நேற்று புதன் கிழமை நிறைவேற்றியுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி முன்மொழிந்த தீர்மானத்தை காங்கிரஸ் பாட்டாளி மக்கள் கட்சி, ம.தி.மு.க. ஆகியவை வரவேற்றுள்ளன.
தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ஒரு சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தில் சுதர்சனம் (காங்கிரஸ்) ஜி.கே.மணி (பா.ம.க) கண்ணப்பன் (ம.தி.மு.க) ஆகியோர் உரையாற்றினர்.
இந்த விவாதத்தில் முதலமைச்சர் கருணாநிதியும் பங்கேற்று தமது கருத்துகளைத் தெரிவித்தார். அரசின் சார்பாக தீர்மானம் ஒன்றையும் கொண்டு வந்தார். அப்போது முதல்வர் கூறியதாவது;
இந்த அவையில் நிறைவேற்றப்படும் தீர்மானம் பரிவு உணர்வோடும் இரக்க சிந்தனையோடும் தமிழர்களுக்கு உதவிடும் பாசமனப்பான்மையோடும் கொண்டு வர வேண்டும். அதே அடிப்படையில் இதன் மீது விவாதம் நடைபெற்று இருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
ஆனால், ஜி.கே.மணி என்ன நோக்கத்தில் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வர நினைத்தாரோ அந்த நோக்கம் சிதையும் வகையில் சில வார்த்தைப் பிரயோகம் அமைந்துவிட்டதற்காக நான் வருத்தப்படுகிறேன்.
இந்தியப் பேரரசின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு நிர்வாகத்தை நாம் நடத்தி வருகிறோம். இந்த அவையில் எழுப்பப்படும் கருத்து நிறைவேற்றப்படும் தீர்மானம் அந்த ஆணிவேரை அசைத்துவிடக்கூடாது. அது தான் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகும்.
இங்கே பேசிய ம.தி.மு.க. உறுப்பினர் கண்ணப்பன் , சுதர்சனத்திற்குப் பதில் அளிக்கும் வகையில் ஒரு மாறுபட்ட கருத்தைச் சொல்ல வந்தபோது உணர்ச்சி வேகத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஒரு கருத்தைத் தெரிவித்து விட்டார். அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு வேண்டுகிறேன்.
இலங்கைப் பிரச்சினை தொடங்கிய காலம் முதல் செல்வா உள்ளிட்ட தலைவர்கள் பலரும் பல்வேறு அறவழிப் போராட்டங்கள் , கிளர்ச்சிகள் நடத்தினார்கள். அது பயனளிக்காத நிலையில் இலங்கை ஆதிக்கத்தின் கொடுமையில் இருந்து விடுதலை பெற்றே ஆக வேண்டும் என்று சிலர் போராளிகளாக மாறினார்கள்.
அவர்கள் அனைவரும் ஒரே குழுவாக ஒற்றுமையுடன் இருந்து போராட்டம் நடத்தி இருந்தால் இப்போது நேபாளத்தில் கிடைத்திருப்பது போல ஒரு வெற்றியை அவர்கள் ஈட்டியிருக்க முடியும். ஆனால், அங்குள்ள போராளி குழுக்களுக்குள்ளே நடந்த போராட்டம் தான் இன்று இந்த அவையிலே அவர்களுக்காக பரிந்துரை செய்து பேசும் நிலைமை உருவாகி உள்ளது. முன்னரும் நான் சகோதர யுத்தத்தை நிறுத்துங்கள் என்று சொல்லியிருக்கிறேன்.
ஒரே குழுவாக இருந்து தமிழர்களுக்குரிய உரிமைகளைப் பெறும் எண்ணம் அவர்களிடம் இல்லாமல் ஒரு குழு மற்றக் குழுவினரை மாய்க்க வேண்டும் என்று வெட்டிக் கொண்டும் சுடப்பட்டும் மாய்ந்தார்கள். அமிர்தலிங்கம் போன்ற தலைவர் கொல்லப்பட வேண்டியவரா? விருந்துக்கு என்று வந்து அவரையும் அவரது தோழர்களையும் பிணமாகச் சாய்த்தார்கள்.
அதனால் தான் உலகில் பல விடுதலைப் போராட்டங்கள் வெற்றி பெற்றும் கூட இவர்களால் வெற்றி பெற முடியவில்லை. நமக்குள்ளே ஒற்றுமையின்றி பகைவருக்கு இடம் கொடுத்துவிட்டதால் தான் சிங்கள இராணுவம் நம்மீது ஏறி மிதிக்கிறது. ஆனாலும் கூட நம் குழந்தை தவறி விழும்போது தாங்கிப் பிடிக்கும் தாய் உள்ளத்துடன் நாம் செயற்படுகிறோம்.
தொப்புள்கொடி உறவு என்று சொன்னால் மட்டும் போதாது. அந்த உறவுகளை நாம் காப்பாற்ற வேண்டும். அதற்காக இங்கே ஒரு தீர்மானம் வருவதை நானும் ஆதரிக்கிறேன். அதே நேரத்தில் இந்திய அரசை குறை கூறிப் பயன் இல்லை. அவர்கள் பெரும் இழப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். எனவே, அவர்களைப் பழிசொல்லியும் குறைகூறியும் பயன் இல்லை.
அந்தக் குடும்பம் இன்னும் மனித நேயத்துடன் தான் இருக்கிறது என்பதற்கு வேலூர் சிறைச்சாலைச் சம்பவமும் சோனியா மன்னிப்பு அளித்ததும் உதாரணங்களாகும். அதன் அடிப்படையில் அவர்கள் தமிழர்களின் உயிருக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்தத் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன். நீங்கள் இதை ஆதரித்துத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கூறிய முதல்வர் கருணாநிதி தீர்மானத்தை வாசித்தார். அந்தத் தீர்மானத்தில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் வருமாறு;
இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அங்கு மோதலில் ஈடுபட்டு வரும் இரு பிரிவினர் இடையேயும் பேச்சுவார்த்தைக்கு இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இலங்கையில் அமைதியை ஏற்படுத்த முறையானதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்காக பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன் வர வேண்டும். இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
குரல் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து சுதர்சனம், ஜி.கே.மணி , கண்ணப்பன் ஆகியோர் இத்தீர்மானத்தை தங்கள் கட்சி வரவேற்பதாகத் தெரிவித்தனர்.