* பொலிஸ்மா அதிபர் விக்டர் பெரேரா அறிவுறுத்தல்
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடக்கும் காலப்பகுதியில் தங்களுக்குரிய அதிகார எல்லைகளுக்குள் வன்முறைகளோ, ஊழல் மோசடிகளோ இடம்பெறாமல் பார்த்துக் கொள்வது மாவட்ட பொலிஸ் உயர்மட்டத்தினரின் பொறுப்பு எனத் தெரிவித்திருக்கும் பொலிஸ்மா அதிபர் விக்டர் பெரேரா தேர்தல் வன்முறைகளோ, ஊழல் மோசடிகளோ, இடம்பெற்றால் அதற்கான முழுப்பொறுப்பையும் இந்த பொலிஸ் உயரதிகாரிகளே ஏற்கவேண்டுமெனவும் வலியுறுத்திக்கூறியுள்ளார்.
முக்கியமாக தமக்குரிய அதிகாரப் பிரதேசங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதன் மூலம் அமைதிச் சூழலை பேணுவதற்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் முழு அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நியமனப்பத்திரங்கள் தாக்கல் செய்த பின்னர் இதுவரையில் 22 க்கும் அதிகமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டிய பொலிஸ் மா அதிபர் இந்த எண்ணிக்கை அதிகரிக்காமல் தக்க வைத்துக்கொள்ளும் பொறுப்பு பொலிஸ் அதிகாரிகளின் கடப்பாடாகுமெனவும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் கையெழுத்துடன் கூடிய அறிவுறுத்தல் மூன்று மாவட்டங்களினதும் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் நாட்களில் தபால் அலுவலகப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக தேர்தலுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்தார்.
தேர்தல் முடிவுறும் வரையிலான காலப்பகுதியில் மூன்று மாவட்டங்களிலும் 24 மணி நேரச் சேவையாக விசேட நடமாடும் பொலிஸ் ரோந்துச் சேவையை ஆரம்பித்திருப்பதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கூறினார்.
தேர்தல் சட்டவிதிகளை மீறுவோர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.