-ரொஷான் நாகலிங்கம்-
பஹ்ரெய்னில் இலங்கையருக்கு அதிகளவில் தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கவும் அங்குள்ள இலங்கைத் தொழிலாளர்களைப் பாதுகாக்கவும் அந்நாட்டு தொழிலமைச்சர் மஜீத் பின் மொஹின் அல் அலவியுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளார்.
மேற்படி உடன்படிக்கை புதன்கிழமை அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது. இதன்மூலம், பஹ்ரெய்னில் இலங்கையருக்கு மேலும் அதிகளவான தொழில்வாய்ப்புப் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதுடன், அங்கு பணிபுரியும் இலங்கையருக்கு தொழில் பாதுகாப்பும் கிடைக்கவுள்ளது.
பஹ்ரெய்னில் அதிகளவு வெற்றிடங்கள் நிலவும் வங்கி, காப்புறுதி, மீன்பிடி உற்பத்தி மற்றும் உல்லாசத் துறைகளில் உள்ள நிலையில் இதில் 50 சதவீதமான தொழில்வாய்ப்பு இந்த உடன்படிக்கை மூலம் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.
மேலும், பல்வேறு இன்னல்களுக்குள்ளாகி இலங்கைத் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக நாட்டுக்கு வரவழைப்பதற்கும் இவ்வொப்பந்தம் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது.
இந்த வேலைவாய்ப்புகள் வெளிநாட்டு முகவர் ஊடாக வழங்கப்படாது வேலைவாய்ப்பு பணியகத்தினாலேயே மேற்கொள்ளப்படவுள்ளதுடன், பல்வேறுபட்ட தராதரங்களுக்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.
இதேவேளை, பஹ்ரெய்ன் தொழிலமைச்சருடன் வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் குழுவொன்றும் வந்துள்ளதுடன், இலங்கையில் முதலீடு மேற்கொள்வது குறித்தும் சம்பந்தப்பட்ட முக்கியஸ்தர்களை இக்குழுவினர் சந்திக்கவுள்ளனர்.